காட்டுயானையை பிடிக்க வந்த கும்கி யானைக்கு மதம் பிடித்ததால் மீண்டும் முகாமுக்கே அனுப்பி வைப்பு
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே காட்டுயானையை பிடிக்க வந்த கும்கி யானைக்கு மதம் பிடித்ததால் மீண்டும் முகாமுக்கே அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை,
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே காட்டுயானையை பிடிக்க வந்த கும்கி யானைக்கு மதம் பிடித்ததால் மீண்டும் முகாமுக்கே அனுப்பி வைக்கப்பட்டது. ஆனைக்கட்டி வனப்பகுதியில் கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் எட்டு வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இருப்பதாக அப்பகுதி மக்கள் கேரளா மற்றும் தமிழக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து அந்த காட்டு யானையை பிடிக்க இரண்டு கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்தனர். இதில் அரிசி ராஜா என்ற யானைக்கு மதம் பிடித்ததால் அதனை வனத்துறையினர் வாகனத்தில் ஏற்றி மீண்டும் ஆனைமலை புலிகள் முகாமுக்கு கொண்டு சென்றனர்.
தமிழகம் மற்றும் கேரளப்பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மூர்த்தி என்ற காட்டு யானை 22 பேரை கொன்றது. அதன் பிறகு முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட அந்த யானைக்கு கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு கும்கி யானையாக மாற்றப்பட்டது.
கடந்த 25 ஆண்டுகளாக கும்கி யானையாக பணியாற்றி வந்த மூர்த்தி யானைக்கு 60 வயதை எட்டியுள்ளதால் ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மூர்த்தி யானையின் பணி நிறைவு விழா ஏற்பாட்டை செய்துவரும் வனத்துறையினர் தொடர்ந்து உணவு மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டு யானை கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.