கும்கி யானைகள் டாப்சிலிப்புக்கு திருப்பி அனுப்பப்பட்டது


கும்கி யானைகள் டாப்சிலிப்புக்கு திருப்பி அனுப்பப்பட்டது
x

கன்னிவாடிக்கு வந்த கும்கி யானைகள் மீண்டும் டாப்சிலிப்புக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

திண்டுக்கல்

கன்னிவாடி:

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பண்ணப்பட்டி, கோம்பை கிராம பகுதிகளில் கடந்த 2 மாதமாக குட்டைக்கொம்பன் என்ற ஒற்றையானை அட்டகாசம் செய்து வந்தது. குறிப்பாக இரவு நேரங்களில் தனியாகவும், கூட்டத்துடனும் சேர்ந்து தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. இதனால் விவசாயிகள் இரவு நேரங்களில் தோட்ட பகுதிக்கு செல்லவே அச்சம் அடைந்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னிவாடி வனச்சரக வேட்டை தடுப்பு காவலர் ஒருவரை யானை மிதித்து கொன்றது.

விவசாயிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றையானையை பிடிக்கவும், காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும் வனத்துறை சார்பில் பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி, கலீம் என்ற 2 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டது. பின்னர் கும்கி யானைகள் உதவியுடன் ஒற்றையானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனால் அதை பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் சின்னத்தம்பி, கலீம் ஆகிய கும்கி யானைகளை வனத்துறையினர் டாப்சிலிப்புக்கு திருப்பி அனுப்பினர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனப்பகுதியை ஒட்டிய பகுதிக்குள் சுற்றித்திரிந்த யானைகள் தற்போது மேல்மலைப்பகுதிக்கு சென்றுவிட்டதால் கும்கி யானைகள் மீண்டும் லாரியில் டாப்சிலிப்புக்கு அனுப்பப்பட்டது என்றனர்.


Next Story