முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு கும்கி பயிற்சி-வனத்துறையினர் தகவல்
கூடலூர்
முதுமலையில் தினமும் காலையில் வளர்ப்பு யானைகளின் நினைவாற்றலை பாதுகாக்கும் வகையில் கும்கி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
28 வளர்ப்பு யானைகள்
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், கரடிகள், செந்நாய்கள், புலிகள், சிறுத்தை புலிகள் என வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. இது தவிர தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை அரவணைக்கும் மையமாக தெப்பக்காடு முகாம் செயல்பட்டு வருகிறது. பிற வனவிலங்குகள் உடல்நலம் பாதித்தல் உள்பட பல்வேறு காரணங்களால் சிரமம் அடையும் சமயத்தில் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர்.
பின்னர் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு மீண்டும் வனத்தில் பாதுகாப்பாக விடப்படுகிறது. இதில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகள் அல்லது ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை வனத்துறையினர் பிடித்து முகாமில் பராமரித்து வருகின்றனர். நாளடைவில் பயிற்சி அளித்து கும்கியாக மாற்றப்படுகிறது. தற்போது முதுமலை தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் முகாம்களில் வில்சன், உதயன், பொம்மன், ரகு, பொம்மி, கிருஷ்ணா, சங்கர், மசினி உள்பட 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தினமும் காலையில் பயிற்சி
தினமும் காலை 9 மணி மற்றும் மாலை 6 மணிக்கு ஊட்டச்சத்து உணவுகள் வளர்ப்பு யானைகளுக்கு வழங்குவதை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதேபோல் வனப்பகுதியில் ரோந்து செல்லுதல், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை விரட்டியடித்தல் உள்ளிட்ட பணிகளில் வளர்ப்பு யானைகள் ஈடுபடுத்தப்படுகிறது.இந்த நிலையில் மனிதர்களுக்கு உடற்பயிற்சி தேவைப்படுவது போல் வளர்ப்பு யானைகளுக்கும் தினமும் காலை 8 மணிக்கு கும்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் காட்டு யானையை பிடிப்பது மற்றும் விரட்டுவது குறித்து வளர்ப்பு யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் முகாமில் உள்ள குட்டி யானைகள் ரகு, பொம்மிக்கு தொடக்க கால அடிப்படை பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- மனிதர்களுக்கு நடை மற்றும் உடற்பயிற்சி அன்றாடம் செய்வது போல் வளர்ப்பு யானைகளுக்கும் தினமும் காலையில் பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. மூத்த வளர்ப்பு யானைகளுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள நிலையில் நினைவாற்றலை பாதுகாக்கும் வகையில் தினமும் காலையில் கும்கி பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் காலை உணவுக்குப் பிறகு பல்வேறு பணிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.