அமராவதி பிரதான வாய்க்கால் கரையில் லாரிகளில் கொட்டப்படும் குப்பைகள்

மடத்துக்குளத்தையடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் அமராவதி பிரதான வாய்க்கால் கரையில் லாரி லாரியாக குப்பைகள் கொட்டப்படுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
வளமீட்பு பூங்கா
மடத்துக்குளம் பேரூராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாக குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில், மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட வேண்டும்.பின்னர் மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத குப்பைகளை மறு சுழற்சிக்காகவும் பயன்படுத்த வேண்டும்.
இதற்கென மடத்துக்குளம் பெரிய வட்டாரம் பகுதிக்கு அருகில் வள மீட்புப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மடத்துக்குளம் பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த வார்டுகளிலேயே குவித்து வைக்கப்படுகிறது. பின்னர் அவை லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு கிருஷ்ணாபுரம் அருகில் அமராவதி பிரதான வாய்க்கால் கரை மற்றும் அமராவதி ஆற்றுப்பாலம் அருகில் கொண்டு சென்று கொட்டப்படுகிறது.
பாழாகும் விளைநிலங்கள்
குறிப்பாக அமராவதி வாய்க்கால் அருகில் குப்பைகள் மலை போல குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகி வருகின்றனர். காற்றில் பறக்கும் பாலிதீன் கழிவுகள் பிரதான வாய்க்காலில் விழுந்து பாசன நீருடன் கலந்து விளைநிலங்களுக்கு சென்று சேர்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாழாகி வருகிறது. மேலும் பாசன நீரில் கலந்து வரும் கழிவுகளால் மடைகளில் அடைப்பு ஏற்பட்டு பெருமளவு நீர் வீணாகிறது.
மழைக்காலங்களில் குப்பைக் கழிவுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் புழுக்கள் பாசன நீரில் கலப்பதால் அந்த நீரைக் குடிக்கும் கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் விவசாயிகள் வேதனையடைத்துள்ளனர். மேலும் மலை போல குவிந்துள்ள குப்பைகளை குறைக்கும் நோக்கத்தில் அவ்வப்போது தீ வைத்து கொளுத்தி விடுகிறார்கள். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறிவிடுகிறது. இந்த பகுதி கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் புகைமூட்டத்தில் சிக்கி விபத்துக்குளாகும் நிலை உள்ளது.
பாலிதீன் கழிவுகள்
டயர்கள் உள்ளிட்ட கழிவுகள் எரிவதால் அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் சுவாசக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே வாய்க்கால் அருகில் குப்பைகள் கொட்டுவதை கைவிட வேண்டும். மேலும் இந்த பகுதியிலிருந்து குப்பைகளை முழுமையாக அகற்றி சுகாதாரமான சூழலை உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மடத்துக்குளம் பேரூராட்சித்தலைவர் கலைவாணி பாலமுரளியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
மடத்துக்குளம் பேரூராட்சிப் பகுதியில் தினசரி சுமார் 2 டன் அளவில் குப்பைகள் சேகரமாகிறது. இவற்றை கொட்டி இருப்பு வைப்பதற்கு வள மீட்புப் பூங்காவில் போதிய இடவசதி இல்லை. எனவே பேரூராட்சி குப்பைகளை கொட்டும் வகையில் கண்ணாடிப்புத்தூர் பகுதியிலுள்ள இடத்தை ஒதுக்கித் தருமாறு மாவட்ட கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இதுவரை இடம் ஒதுக்கித் தரப்படவில்லை. வேறு வழியில்லாத சூழலில் வாய்க்கால் கரையில் குப்பைகளை கொட்ட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.உடனடியாக இடம் ஒதுக்கித் தந்தால் குப்பைகளை முழுமையாக அப்புறப்படுத்தி அந்த பகுதியில் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






