குப்பை இல்லாத மாநகரமாக மாற்ற உறுதியேற்போம்
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமை தாங்கினார். துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மேயர் தினேஷ்குமார் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பங்களிப்பு வழங்கிய கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மேயர் வழங்கி பாராட்டினார். சிறப்பாக பணியாற்றிய அலுவலக பொறியாளர்கள், பணியாளர்கள், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பணிப்பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. விழாவில் மேயர் தினேஷ்குமார் பேசுகையில், திருப்பூர் மாநகரை குப்பை இல்லாத மாநகரமாக மாற்ற சுதந்திர தினநாளில் உறுதியேற்போம்' என்றார்.
திருப்பூர் மாநகராட்சி பள்ளிகளில் படித்து பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் 5 மதிப்பெண்களை பெற்ற 16 மாணவ-மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி நாணயங்களை மேயர் வழங்கி பாராட்டினார். பின்னர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.37 லட்சம் மதிப்பில் கடனுதவி, மாநகராட்சியில் பணி ஓய்வு பெற்ற 5 ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய தொகை ஆகியவற்றை மேயர் வழங்கினார். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக சென்று குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மண்டல தலைவர்கள் கோவிந்தராஜ், உமாமகேஸ்வரி, கவுன்சிலர்கள், துணை ஆணையாளர் சுல்தானா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
------