குப்பைத்தொட்டியாகும் பாசன வாய்க்கால்கள்


குப்பைத்தொட்டியாகும் பாசன வாய்க்கால்கள்
x
திருப்பூர்


மடத்துக்குளம் அருகே பாசன வாய்க்கால்களை குப்பைத் தொட்டியாக்கும் செயலால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

நீராதாரங்கள்

உணவு உற்பத்தித் தொழிலான விவசாயத்தில் மண் வளம், நீர்வளம், சாதகமான பருவநிலை, தரமான விதைகள் உள்ளிட்டவை முக்கிய இடம் பிடிக்கின்றன.ஆனால் சமீப காலங்களாக இந்த 4 முக்கியமான காரணிகளும் விவசாயிகளுக்கு கைகொடுக்காத நிலையே உள்ளது.அதிலும் நீராதாரங்கள் படிப்படியாக பாழ்படுத்தப்பட்டு வருவதால் வருங்காலத்தில் பாசன நீருக்கு மட்டுமல்லாமல் குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தநிலையில் மடத்துக்குளம் பகுதியின் முக்கிய பாசன ஆதாரமாக உள்ள அமராவதி பாசன வாய்க்கால்கள் பராமரிப்பில்லாத நிலையால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பல பகுதிகளில் பாசன வாய்க்கால்கள் குப்பைத் தொட்டிகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

விழிப்புணர்வு

குறிப்பாக மடத்துக்குளத்தையடுத்த பாப்பான்குளம் பகுதியில் பாசன வாய்க்கால் மடை பகுதியில், அருகிலுள்ள டீக்கடையில் பயன்படுத்தப்பட்ட (தடை செய்யப்பட்ட) டம்ளர்கள் மற்றும் கழிவுகள் கொட்டப்படுகின்றன. மேலும் வாய்க்கால் பராமரிப்பில்லாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் வாய்க்காலையே தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் நேரத்தில் இதுபோல கொட்டப்படும் கழிவுகள் விவசாய நிலங்களை வந்தடைகின்றன. இதனால் மண் வளம் பாழாவதுடன் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.மேலும் பிளாஸ்டிக் கழிவுகளால் மடைகளில் அடைப்பு ஏற்பட்டு பாசன நீர் வீணாகிறது.இதனால் கடை மடைகளுக்கு தண்ணீர் சென்று சேராத நிலையால் பயிர் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் இழப்பை சந்திக்கின்றனர்.எனவே பாசன ஆதாரங்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேநேரத்தில் நீராதாரங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story