குப்பைக்கு தீ வைப்பதால் புகைமூட்டம்


குப்பைக்கு தீ வைப்பதால் புகைமூட்டம்
x
திருப்பூர்

குப்பைக்கு தீ வைப்பதால் புகைமூட்டம்

உடுமலை- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று ராகல்பாவி பிரிவு அருகே மரங்களுக்கு அருகில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்து விட்டனர். இதனால் ஏற்பட்ட வெப்பம் மரங்களை தாக்கியதுடன் தீயினால் ஏற்பட்ட புகை மண்டலமும் சாலையில் பயணித்த வாகன ஓட்டிகளுக்கு இடையூறை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "உடுமலை- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் ராகல்பாவி பிரிவுக்கு அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு மர்ம சாமிகள் நேற்று தீ வைத்து விட்டனர்.

கொழுந்து விட்டு எரிந்த தீ மற்றும் அதில் இருந்து கிளம்பிய புகை வாகன ஓட்டிகளை நிலை தடுமாற செய்தது. அதுமட்டுமின்றி தீயின் தாக்கத்தை தாங்க முடியாமல் புளிய மரங்கள் கருகும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழலை காப்பதில் மரங்களின் பங்கு முதலிடம் வகிக்கிறது. இதைக்கூட அறியாமல் அதற்கு இறப்பு ஏற்படுத்தும் வகையில் தீ வைப்பு சம்பவம் நடைபெற்று உள்ளது வேதனை அளிக்கிறது.

இதே போன்று இந்த சாலையின் ஓரத்தில் 2 புறமும் ஏராளமான குப்பைகள் மூட்டை மூட்டையாக ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளது. அவற்றில் இருந்து கிளம்பி வருகின்ற கடும் துர்நாற்றம் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்வரவில்லை. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நெடுஞ்சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை முழுமையாக அகற்றுவதற்கு முன்வர வேண்டும்" என்றனர்.


Next Story