கைத்தறி நெசவு ஜவுளி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்


கைத்தறி நெசவு ஜவுளி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்
x
திருப்பூர்


கைத்தறி நெசவு ஜவுளி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களின் மாநில கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களின் மாநில கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட தலைவர் ஆர்.என்.உமாபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வி.வடிவேல் வரவேற்றார்.

மாநில கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.சவுண்டப்பன், மாநில பொருளாளர் ஆ.வெங்கடேஷ்வரன், அமைப்புச்செயலாளர் என்.கண்ணன், துணைத்தலைவர் பி.பரமசிவம், துணைச்செயலாளர் எஸ்.ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் வீ.மல்லீஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தியும், வாழ்த்தியும் பேசினார்கள். முடிவில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சுந்தரவடிவேலு நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கைத்தறி நெசவு ஜவுளி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டி மத்திய அரசை வலியுறுத்துவது. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் ரகங்களுக்கு தற்போது அரசு வழங்கும் தள்ளுபடி மானிய தொகையை உச்சவரம்பின்றி முழுமையாக வழங்க ஆவணம் செய்ய வேண்டும். கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தொடர் வேலை வாய்ப்பினை உறுதி செய்திடவும், உற்பத்திக்கு தேவையான கச்சா பொருட்களை சங்கங்கள் நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்.

ஓய்வு பெற்ற நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி சிறப்பு காலவரை ஊதியம் நிர்ணயம் செய்யப்படாமலும், பணிநிரந்தரம் செய்யப்படாமலும் விடுபட்ட அனைத்து பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட கிளை தொடங்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக்கொண்டனர்.


Next Story