பஞ்சாலை தொழிலாளர் மாநில சம்மேளன கூட்டம்
தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனத்தின் விரிவடைந்த மாநிலக்குழு கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. அகில இந்திய செயலாளர் கருமலையான், பொதுச்செயலாளர் அசோகன் உள்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், பஞ்சாலை தொழிலில் பணிபுரியும் பயிற்சியாளர்களுக்கு அரசாணைப்படி, குறைந்தபட்சம் தினசரி ஊதியம் ரூ.512 வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரத்துக்கு குறைவில்லாமல் மாத ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். அடிப்படை வேலை நேரம் 8 மணி நேரம் என்பதை உறுதி செய்ய வேண்டும். கூடுதல் பணிக்கு சட்டப்படி இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர் விரோத நடவடிக்கையை கைவிட வேண்டும். தொழிலாளர் நலன், உரிமைகள் காக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னையில் வருகிற 9-ந் தேதி நடக்கும் அனைத்து தொழிற்சங்க போராட்டத்திலும், 14-ந் தேதி விவசாயிகள் சங்கம், விவசாய தொழிற்சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்தும் விடியலை நோக்கி இந்தியா இயக்கத்திலும் பஞ்சாலை தொழிலாளர்கள் திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.