குடிநீர் பற்றாக்குறை தொடர்பான ஆலோசனை கூட்டம்

உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் பற்றாக்குறை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அவசரக் கூட்டம்
உடுமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்ற கிராமங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஒன்றிய குழு மற்றும் மாவட்ட குழு உறுப்பினருக்கு அவசர கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்றுமாலை அவசரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கிராமங்களில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சினை குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார்கள்.
புதிய திட்டம் வேண்டாம்
மேலும் பழைய படியே கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துமாறும் புதிய திட்டம் வேண்டாம் என்றும் சீரான முறையில் குடிநீர் வழங்குமாறு ஊராட்சி மன்ற தலைவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கப்படும் என்று கூறினார்கள்.
இந்த நிகழ்வின் போது உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சரவணன், சுப்பிரமணியம் (கி.ஊ), தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.தங்கராஜ் என்ற மெய்ஞான மூர்த்தி, திருப்பூர் தெற்கு மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் உடன் இருந்தனர்.






