வாலிபரை கொலை செய்த தொழிலாளி கைது
கோவில்பாளையத்தில் வாலிபரை கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
சரவணம்பட்டி
கோவில்பாளையத்தில் வாலிபரை கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தொழிலாளி
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது42) இவர் தனது மனைவி பிரேமா (40) மற்றும் 3 குழந்தைகளுடன் கோவை விசுவாசபுரம் டெக்ஸ்டூல் நகரில் உள்ள தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இவர் கணபதியில் உள்ள மின் மோட்டார் தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். பிரேமா விளாங்குறிச்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரேமாவுக்கு தஞ்சாவூர் மாவட்டம் மணத்திடல் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் ஜெகதீசன் (31) என்பவருக்கும் முகநூல் மூலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. இதனால் அவர்கள் தங்களின் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு அடிக்கடி பேசி வந்தனர்.
பாஸ்போர்ட் மாயம்
இதையடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஜெகதீசன் கோவைக்கு வந்தார். அவர், பிரேமா மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து வேலை தேடி வந்ததாக கூறியுள்ளார். அதை நம்பிய கார்த்திகேயன், ஜெகதீசனுக்கு தான் வேலை செய்யும் இடத்தில் வேலை வாங்கி கொடுத்து தனது வீட்டிலேயே தங்க அனுமதித்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து ஜெகதீசன் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல திட்டமிட்டார். அதற்காக எடுத்த தனது பாஸ்போர்ட்டை பிரேமா விடம் கொடுத்து வைத்திருந்ததாக தெரிகிறது. அதை சில வாரங்க ளுக்கு முன்பு பிரேமாவிடம் ஜெகதீசன் திருப்பி கேட்டுள்ளார்.
தகராறு
அதற்கு பிரேமா, வீட்டில் இருந்த பாஸ்போர்ட்டை காணவில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஜெகதீசன் பிரேமாவிடம் சண்டை போட்டுவிட்டு சொந்த ஊருக்கு சென்றார். அவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் கோவைக்கு வந்து பிரேமா வீட்டில் தங்கி உள்ளார்.
சம்பவத்தன்று பாஸ்போர்ட் காணாமல் போனது குறித்து கார்த்தி கேயனுக்கும், ஜெகதீசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். ஆனால் அதன்பிறகும் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.
இரும்புக்கம்பியால் தாக்கி கொலை
இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன், ஜெகதீசனை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ஜெக தீசனின் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாலை வீட்டுக்கு திரும்பிய பிரேமா ஜெகதீசன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி அவர் தனது கணவரிடம் விசாரித்தார். இதற்கிடையே பள்ளியில் இருந்து 3 குழந்தைகளும் வீட்டிற்கு வந்தன. உடனே கார்த்திகேயன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தஞ்சாவூருக்கு அழைத்து செல்வதற்காக சிங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு சென்றார்.
கைது
இந்த நிலையில் ஜெகதீசன் பிணமாக கிடப்பது குறித்து கோவில் பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெகதீசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் சிங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று கார்த்திகேயனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.