வால்பாறை அருகே சிறுத்தை தாக்கி தொழிலாளி படுகாயம்


வால்பாறை அருகே சிறுத்தை தாக்கி தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 27 Sep 2022 6:45 PM GMT (Updated: 27 Sep 2022 6:45 PM GMT)
கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே சிறுத்தை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

சிறுத்தை தாக்கியது

கோவை மாவட்டம் வால்பாறை அருகில் உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் சின்னமுருகன் (வயது 52). தொழிலாளி. இவர் நேற்று நல்லகாத்து எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 44-ம் நம்பர் தேயிலை தோட்டத்தில் தேயிலை செடிக்கு பூச்சி மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தேயிலை தோட்டத்தின் அருகில் இருந்த செடிகளுக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று சின்னமுருகன் மீது பாய்ந்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத சின்னமுருகன் கூச்சலிட்டு கொண்டு சிறுத்தையுடன் போராடியுள்ளார்.இவரின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த தோட்ட மேற்பார்வையாளர் இம்மானுவேல் மற்றும் சக தொழிலாளர்கள் சத்தம் போட்டப்படி அங்கு வந்து உள்ளனர்.

தீவிர சிகிச்சை

இதனால் அந்த சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடிமறைந்தது. இதையடுத்து சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்த சின்ன முருகனை மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதுபற்றி அறிந்ததும் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சின்னமுருகனுக்கு ஆறுதல் கூறி வனத்துறை சார்பில் நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கினார்.

பட்டப்பகலில் தேயிலை தோட்ட தொழிலாளியை சிறுத்தை தாக்கிய சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story