லாரி மோதி தொழிலாளி படுகாயம்; டிரைவர் கைது
லாரி மோதி தொழிலாளி படுகாயமடைந்தார். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள வடகடல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 47). கூலி தொழிலாளி. இவருக்கு சந்தோஷ் (20) என்ற மகனும், தர்ஷினி (16) என்ற மகளும் உள்ளனர். இதில் தர்ஷினி நாச்சியார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அவரை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக கண்ணன் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது தூத்தூர் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரனின் மகன் ராமதாஸ்(31) ஓட்டிச்சென்ற லாரியை திடீரென வலது பக்கம் திரும்பியதால், பின்னால் கண்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் கண்ணன் பலத்த காயமடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின்பேரில் டிரைவர் ராமதாஸ் மீது உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.