ஊட்டி அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி பலி
ஊட்டி அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊட்டி
ஊட்டி அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தொழிலாளி
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த பாலாகொலா அருகில் உள்ள முதுகுலாவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 58). தொழிலாளி. இவருடைய மனைவி வள்ளி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். சுப்பிரமணி அந்தப் பகுதியில் கேரட் கழுவுதல் உள்ளிட்ட பணிகளுக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் சுப்பிரமணி வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவருடைய உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். ஆனாலும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரை செல்போனில் அழைத்து தொடர்பு கொள்ள முயற்சித்த போது நீண்ட நேரமாக செல்போனில் ரிங் ஆனது, ஆனால் யாரும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து ஊட்டி ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காட்டெருமை தாக்கி பலி
இந்த நிலையில் சுப்பிரமணி முதுகுலா அருகில் உள்ள ஈடன்வேலி பகுதியில் புதரில் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சுப்பிரமணி காட்டெருமை தாக்கியதால் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.