ஜீப் மோதி தொழிலாளி பலி


ஜீப் மோதி தொழிலாளி பலி
x

நாகை அருகே ஜீப் மோதியதில் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலியானார். மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

நாகை அருகே ஜீப் மோதியதில் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலியானார். மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

தொழிலாளி பலி

நாகை நகரம் சுண்ணாம்பு கால்வாய் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 41). பிளம்பராக வேலை பார்த்து வந்த இவர், தற்போது நாகை அருகே பொரவாச்சேரி ஊராட்சி கனகரத்தினம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், மதுபாலா, சுபஸ்ரீ என்ற பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு, இரவு வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாகை - திருவாரூர் மெயின் சாலையில் பொரவாச்சேரி பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது, எதிரே கீழ்வேளூரில் இருந்து நாகை நோக்கி வந்த ஜீப், வெங்கடேஷ் சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேஷ் பலியானார்.

ஸ்கூட்டரில் சென்றவருக்கு காயம்

மேலும் சைக்கிளுக்கு பின்னால் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த மஞ்சக்கொல்லை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மீதும் ஜீப் மோதியது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் விபத்தில் இறந்த வெங்கடேஷ் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

விபத்தில் காயமடைந்த கண்ணன் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஜீப்பை ஒட்டி வந்த கீழஒதியத்தூர் பகுதியை சேர்ந்த தனபால் மகன் மாணிக்கவாசகம் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story