மணல் கடத்தலை தடுத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிய வழக்கில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை
வீரவநல்லூர் அருகே மணல் கடத்தலை தடுத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிய வழக்கில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து அம்பை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
அம்பை:
வீரவநல்லூர் அருகே உள்ள கிளாக்குளம் சுப்பிரமணியசாமி கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகன் முருகன். (வயது 40) கூலி தொழிலாளி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீரவநல்லூர் பகுதி-1 கிராம நிர்வாக அதிகாரி குணசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் மணல் கடத்திய முருகனை தடுத்துள்ளனர். அப்போது முருகன் தன் கையில் வைத்திருந்த அரிவாளால் அங்கும் இங்கும் சுழட்டும் பொழுது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி கையில் அரிவாள் பட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தல், மணல் கடத்தல் போன்ற குற்றங்களுக்காக முருகன் மீது வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு அம்பை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி செந்தில்குமார் விசாரித்து முருகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதம் விதித்தும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தன்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் திருமலை குமார் ஆஜரானார்.