கூலியை உயர்த்தி கேட்டுடாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கூலியை உயர்த்தி கேட்டு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரத்தில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம், டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்புக்குழு ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லிக்கர் பெட்டி ஒன்றுக்கு இறக்கு கூலியாக ரூ.5.50-ல் இருந்து ரூ.8 ஆகவும், பீர் பெட்டி ஒன்றுக்கு ரூ.4-ல் இருந்து ரூ.8 ஆகவும், பெட்டிக்குள் பெட்டி ஒன்றுக்கு ரூ.6.50-ல் இருந்து ரூ.9 ஆகவும், வெளிநாட்டு மதுபான பெட்டி ஒன்றுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.60 ஆகவும், குடோன்விட்டு குடோன் மாற்றும்போது பெட்டி ஒன்றுக்கு ரூ.10-ல் இருந்து ரூ.15 ஆகவும் உயர்த்தி வழங்கக்கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இதில் சுமைப்பணி தொழிலாளர் சங்க தலைவர் பழனி, டாஸ்மாக் குடோன் சங்க தலைவர் மணிகண்டன், செயலாளர் இளவரசன், பொருளாளர் அய்யப்பன், நிர்வாகி கலைமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.