தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 81 கடைகள்-நிறுவனங்கள் மீது வழக்கு- அதிகாரிகள் நடவடிக்கை


தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 81 கடைகள்-நிறுவனங்கள் மீது வழக்கு- அதிகாரிகள் நடவடிக்கை
x

தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 81 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

ஈரோடு


தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 81 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

மே தின விடுமுறை

மே 1-ந் தேதியான நேற்று தொழிலாளர் தினம் அல்லது உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. எனவே நேற்று மே தினம் தேசிய விடுமுறையாக கடைபிடிக்கப்பட்டது. இந்த நாளில் அனைத்து நிறுவனங்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும் கட்டாயமாக பணியாளர்கள் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தின் போது மே தினத்தில் வேலை செய்தால் இரட்டிப்பு ஊதியம் அல்லது 3 நாட்களுக்குள் மாற்று விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

இதுதொடர்பாக முன்கூட்டியே உரிய படிவம் வழங்கி அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிகாரிகள் சோதனை

இந்த நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா என்று ஆய்வு செய்ய தமிழ்நாடு தொழிலாளர் ஆணையாளரும், முதன்மை செயலாளருமான அதுல் ஆனந்த் உத்தரவிட்டு இருந்தார்.

அதன்பேரில் கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தி.தமிழரசி, ஈரோடு தொழிலாளர் இணை ஆணையாளர் எல்.ரமேஷ் ஆகியோரின் அறிவுரையின்படி ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் தலைமையில் நேற்று ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.

81 கடைகள் மீது வழக்கு

அப்போது 27 கடைகள், 48 ஓட்டல்கள், 6 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 81 கடைகள்-நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு மே தின விடுமுறை அளிக்கப்படாததும், இதுதொடர்பாக முன் அனுமதி பெறாததும் தெரியவந்தது. எனவே 81 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள்) சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டது.

மேற்கண்ட தகவலை ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் கூறி உள்ளார்.


Next Story