ஓடும் ரெயிலில் ஏற முயன்ற தொழிலாளியின் 2 கால்களும் நசுங்கியது
திருப்பூர் ரெயில் நிலையத்தில்ஓடும் ரெயிலில் ஏற முயன்ற தொழிலாளியின் 2 கால்களும் நசுங்கியது
திருப்பூர்
திருப்பூர் ரெயில்நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏற முயன்ற தொழிலாளியின் 2 கால்களும் நசுங்கியது. அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையை சேர்ந்தவர்
சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 42). இவர் திருப்பூரை அடுத்த அவினாசியில் உள்ள ஒரு சலூன் கடையில் வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் காலை திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்த அவர் அங்கும், இங்கும் சுற்றித்திரிந்துள்ளார்.
இதை ரெயில்வே போலீசார் கவனித்து சத்தம் போட்டு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த நிலையில் நேற்று பாலக்காட்டில் இருந்து ஈரோடு செல்லும் ரெயில் மாலை 6.10 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையத்தில் 2-வது நடைமேடைக்கு வந்தது. பயணிகள் இறங்கி, ஏறினார்கள்.
2 கால்களும் நசுங்கியது
ரெயில் புறப்பட்டபோது, நடைமேடை பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த மாரிமுத்து, திடீரென்று எழுந்து ரெயிலில் ஏற முயன்றுள்ளார். அதற்குள் ரெயில் புறப்பட, தவறி கீழே விழுந்ததில் அவரின் 2 கால்களும் ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கியது. ரெயில் நிலையத்தில் நின்ற பயணிகள் சத்தம் போட ரெயில் நிறுத்தப்பட்டது. இதில் மாரிமுத்துவின் ஒரு கால் முழங்காலுக்கு கீழும், மற்றொரு கால் பாதத்துக்கு கீழும் நசுங்கியது.
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாரிமுத்துவை அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.