குப்பை கிடங்கில் இட பற்றாக்குறை; தரம் பிரிக்கும் பணி பாதிப்பு

ஆனைமலையில் குப்பை கிடங்கில் இட பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் குப்பைகளை தரம் பிரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆனைமலை
ஆனைமலையில் குப்பை கிடங்கில் இட பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் குப்பைகளை தரம் பிரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.
இடவசதி இல்லை
ஆனைமலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சுமார் 22 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தினமும் 9 டன் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் சேகரமாகின்றன. இதை தூய்மை பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர். தொடர்ந்து நரசிம்மநகர் பகுதியில் உள்ள கிடங்கில் கொட்டுகின்றனர். இங்கு குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் 70 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து மக்காத குப்பைகள் மறுசுழற்சிக்கும், மக்கும் குப்பைகள் இயற்கை உரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதில் இயற்கை உரம் கிலோ ரூ.1-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் பேரூராட்சிக்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது.
இந்த நிலையில் நரசிம்ம நகர் கிடங்கில் குப்பைகளை தரம் பிரிக்க போதிய இடவசதி இல்லை. இதனால் தூய்மை பணியாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் குப்பைகளை தரம் பிரிக்கும் பணி பாதிக்கப்படுகிறது.
மாற்று இடம்
இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறும்போது, நரசிம்மநகரில் ஒரு ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு தினமும் 9 டன் குப்பைகள் வருகிறது. விேஷச நாட்களில் 12 டன் குப்பைகள் வருகிறது. ஆனால் இடவசதி குறைவாக உள்ளதால், தரம் பிரிக்கும் பணி பாதிக்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு செம்மேடு செல்லும் வழியில் காந்தி ஆசிரமம் அருகே உள்ள 2 ஏக்கர் நிலத்தை குப்பை கிடங்குக்கு பயன்படுத்த அப்போதைய கலெக்டர் அனுமதி அளித்தார். ஆனால் நிர்வாக காரணங்களால், அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்றனர்.
ஆனைமலை பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், கலெக்டர் அனுமதி வழங்கிய நிலத்தை பயன்படுத்த வருவாய்த்துறையினரும் அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் இதுவரை அதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை. அது கிடைத்ததும், அங்கு பணி தொடங்கப்படும் என்றனர்.






