வாய்மேடு- வேதாரண்யம் வழித்தடத்தில் கட்டணமில்லா பஸ் சேவை தொடங்கப்படுமா? - பெண்கள்
வாய்மேடு- வேதாரண்யம் வழித்தடத்தில் கட்டணமில்லா பஸ் சேவை தொடங்கப்படுமா? என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வாய்மேடு- வேதாரண்யம் வழித்தடத்தில் கட்டணமில்லா பஸ் சேவை தொடங்கப்படுமா? என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கட்டணம் இல்லா பஸ் சேவை
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் 5 முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் பெண்களுக்கான இலவச பஸ் பயணம் தொடர்பான கோப்பும் ஒன்று.
பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்புள்ள இந்த திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தின்படி நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து கரியாப்பட்டினம் வழியாக திருத்துறைப்பூண்டிக்கு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதனை கிராமப்புறங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் வாய்மேடு வழித்தடத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பஸ் சேவை இதுவரை தொடங்கப்படவில்லை.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
வேதாரண்யத்தில் இருந்து வாய்மேடு வழியாக முத்துப்பேட்டைக்கும், வேதாரண்யத்தில் இருந்து வாய்மேடு வழியாக திருத்துறைப்பூண்டிக்கும் கட்டணமில்லா அரசு பஸ் சேவையை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த பகுதியில் ஏராளமான பெண்கள் தினசரி வேலைக்கு சென்று வருகிறார்கள். இலவச பஸ் சேவை தொடங்கப்பட்டால் வேலைக்கு செல்லும் பெண்கள் ஈட்டும் வருவாயில் பயண செலவுக்கான தொகை அவர்களுடைய சேமிப்பாக மாற வாய்ப்பு உள்ளதால் இலவச பஸ் சேவையை தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்மேடு- வேதாரண்யம் வழித்தடம்
நாள்தோறும் வாய்மேட்டில் இருந்து திருத்துறைப்பூண்டி பகுதிக்கும், வேதாரண்யத்துக்கும் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும்.
எனவே வாய்மேடு- வேதாரண்யம் வழித்தடத்தில் இலவச பஸ் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் என வாய்மேடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து வாய்மேடு அருகே உள்ள தகட்டுரை சேர்ந்த புனிதா கூறியதாவது:-
அத்தியாவசிய தேவை
என்னை போன்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் திருத்துறைப்பூண்டி மற்றும் வேதாரண்யம் செல்வதற்கு பஸ்சை மட்டுமே நம்பி உள்ளோம். இந்த நிலையில் மற்ற ஊர்களை போல இலவச பஸ் வசதி இங்கு இல்லை. இது சிரமமாக உள்ளது. அரசின் கட்டணமில்லா பஸ்சை இந்த பகுதியிலும் இயக்கினால் அத்தியாவசிய தேவைகளுக்காக திருத்துறைப்பூண்டி செல்வதற்கு வசதியாக இருக்கும். மேலும் எங்களுடைய செலவு தொகையும் மிச்சப்படும். எனவே உடனடியாக வாய்மேடு- வேதாரண்யம் வழித்தடத்தில் இலவச பஸ் இயக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
பணி நிமித்தமாக...
மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த சுமதி:-
என்னை போன்ற மகளிர் குழு அமைப்பாளர்கள் பணி நிமித்தமாக தினந்தோறும் வங்கி செல்வதற்கும், வேதாரண்யத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களுக்கு தினந்தோறும் செல்வதற்கும் பஸ்களை பெரிதளவு நம்பி உள்ளோம். எனவே அரசு கட்டணமில்லா பஸ்சை இந்த பகுதியில் இயக்க வேண்டும். மேலும் அனைத்து ஊர்களிலும் பெண்களுக்கான இலவச பஸ் சேவை உள்ள நிலையில் இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மட்டும் பஸ்சில் கட்டணம் செலுத்தி பயணித்து வருகிறோம். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து வாய்மேடு தடத்தில் பெண்களுக்கான இலவச பஸ் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.