ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதால் பெண் இன்ஸ்பெக்டரின் மகன் சாவு
ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதால் பெண் இன்ஸ்பெக்டரின் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை ஓட்டேரி, பட்டாளம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சுகுணா. இவர், அசோக் நகரில் உள்ள போலீஸ் பயிற்சி முகாமில் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய கணவர் ராஜ்குமார். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு நிக்கிலன் (வயது 14), நவீன் (11) என 2 மகன்கள்.
இவர்களில் மூத்த மகன் நிக்கிலன், சேத்துப்பட்டில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை ராஜ்குமார், நிக்கிலனுக்கு போன் செய்து, சாப்பிட ஏதாவது வாங்கி வரவேண்டுமா? என பேசினார்.
அதன்பிறகு சுகுணாவும், அவரது இளைய மகனும் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் நிக்கிலன் மட்டும் தனியாக இருந்தார்.
பின்னர் இரவு 8 மணியளவில் ராஜ்குமார் வீட்டுக்கு வந்து பார்த்த போது நிக்கிலன் வீட்டில் உள்ள ஊஞ்சல் கயிறு கழுத்தை சுற்றிய நிலையில் மயங்கி கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நிக்கிலனை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர், நிக்கிலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகனின் உடலை பார்த்து பெண் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் அவரது கணவர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
நிக்கிலன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த ஓட்டேரி போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த நிக்கிலன் ஊஞ்சல் ஆடியதாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதால் அவர் பரிதாபமாக இறந்துவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.