வடமாநில பெண் கற்பழித்து கொலை?
பெருமாநல்லூர் அருகே தலையில் பலத்த காயங்களுடன் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வடமாநில பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் பிணம்
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே ராக்கியாபட்டியில் உள்ள மயான பகுதியில் வடமாநில பெண் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அருகிலேயே ரத்தக் கறையுடன் கல் ஒன்று கிடந்தது. இதனை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், வெள்ளை நிற சுடிதார் அணிந்திருந்தார்.
கற்பழித்து கொலையா?
இதையடுத்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பெண் குறித்த எந்த விவரமும் தெரியவில்லை. அவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர், கற்பழிக்கப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பெருமாநல்லூர் பகுதியில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.