அரசு நூலகத்திற்கு சொந்த கட்டிடம், டிஜிட்டல் வசதி தேவை


அரசு நூலகத்திற்கு சொந்த கட்டிடம், டிஜிட்டல் வசதி தேவை
x

அரசு நூலகத்திற்கு சொந்த கட்டிடம், டிஜிட்டல் வசதி தேவை

சிவகங்கை


ஒரு நூலகம் திறக்கப்படும் போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்பார்கள். ஒரு இனத்தை அடிமையாக்க நினைப்பவர்கள், முதலில் அவர்களின் கைகளில் இருக்கும் புத்தகங்களை பறித்து எறிந்துவிடுவார்கள். இதைத்தான் ஆரம்ப காலத்தில் இருந்து ஆதிக்க சக்திகள் செய்து வந்தன.

கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்களைத் திறந்து கடைக்கோடியின் கைகளிலும் புத்தகங்களைக் கொடுத்து அந்த சதியினை முறியடித்தவர் பெருந்தலைவர் காமராஜர். அதன்பிறகே கல்வியிலும், வாழ்விலும் நாம் எழுச்சியைச் சந்தித்துக்கொண்டு வருகிறோம்.

புத்தகங்களின் அருமையையும், அதை அடைகாத்துவரும் நூலகங்களின் பெருமையையும் இதன் மூலம் உணர முடியும்.

அச்சம்

நூலகங்களில் போய் புத்தகங்களை புரட்டி வாசிப்பது என்பது ஒருவகையான தவம் என்றே சொல்லலாம். அந்த பழக்கம் நம்மிடையே குறைந்து வருகிறதோ என்ற அச்சத்தை புதிய தொழில்நுட்பங்கள் அதிகரிக்கச் செய்கின்றன.

அவைகளுக்கு ஈடுகொடுத்து நமது இளைஞர்களை நூலகங்கள் மீட்டு எடுக்குமா? நூலகங்களின் நிலை என்ன? இளைஞர்கள், இளம் பெண்களின் புத்தக வாசிப்பு எப்படி இருக்கிறது? என்பதை கீழே காண்போம்.

ராமநாதபுரம்-ராமேசுவரம் நெடுஞ்சாலையில் டி.பிளாக் பஸ் நிறுத்தம் அருகில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே மாவட்ட நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் 1 லட்சத்து 48 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 11 ஆயிரத்து 926 பேர் நூலக உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினராக மாதம் ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரூ.1000 முன்பணம் செலுத்தி 154 பேர் நூலக புரவலராக உள்ளனர்.

தினமும் சராசரியாக 150 பேர் நூலகத்திற்கு வந்து புத்தகங்களை வாசிக்கின்றனர்.

டிஜிட்டல்

தொண்டி முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் அக்பர் சுல்தான்: தொண்டியில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்காக சத்திரம் தெருவில் கட்டப்பட்ட சொந்த கட்டிடம் முழுமையாக சேதம் அடைந்து விட்ட நிலையில் சில ஆண்டுகளாக புதுக்குடி செல்லும் சாலையில்வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது செ.மு. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. பள்ளி நேரம் மட்டுமே திறந்திருக்கும் இந்த நூலகம் மற்ற நேரங்களில் பூட்டப்பட்டு இருக்கும். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் முதியோர், பெண்கள் இந்த நூலகத்திற்கு சென்று வாசிக்க முடியாத நிலை இருந்து கொண்டிருக்கிறது. எனவே ஊரின் மையப்பகுதியாக உள்ள சத்திரம் தெருவில் உள்ள நூலகத்தின் சொந்த கட்டிடத்தை அரசு புனரமைப்பு செய்து அதில் நூலகம் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நூலகம் டிஜிட்டல் நூலகமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

போட்டி தேர்வு

திருவாடானை பிரபு: திருவாடானை கிளை நூலகம் யூனியன் அலுவலக வளாகத்தில் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்க தினமும் மிகக்குறைவான அளவிலேயே நூலகத்திற்கு வருகின்றனர். தாலுகா தலைநகரில் உள்ள இந்த நூலகம் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெரிய அளவில் பயனுள்ளதாக இல்லை. இங்கு வைக்கப்பட்டுள்ள போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது. நூலகங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

தொண்டி ஷர்மிளா செல்வி: நூலகம் மக்களின் வாசிப்பு திறமையை வளப்படுத்துவது மட்டும் அல்லாமல் மக்களின் அறிவையும் வளர்க்கும் இடம். ஆனால் ‌ திருவாடானை தாலுகாவில் தொண்டி, திருவாடானை, நம்புதாளை, பாண்டுகுடி ஆகிய 4 இடங்களில் மட்டுமே அரசு கிளைநூலகம் உள்ளது. திருவாடானை யூனியனில் 47 கிராம ஊராட்சிகளில் கிராம நூலகங்கள் உள்ளது. ஆனால் ஒரு சில ஊராட்சிகளை தவிர மற்ற இடங்களில் பெயரளவிலேயே உள்ளது. அரசு ‌நூலகம் தனி கட்டிடத்தில் நிறைய ‌புத்தகங்களுடன் செயல்பட்டால் போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் மட்டும் அல்லாமல் கைபேசியில் மூழ்கி இருக்கும் குழந்தைகளுக்கும் உதவியாக இருக்கும்.

ஆப்பனூர் கிராமத்தை சேர்ந்த வழிவிட்டான்: கடலாடியில் உள்ள நூலகத்தில் போட்டித் தேர்வு எழுதுவதற்கான அனைத்து பாட நூல்களும் உள்ளன. சுற்றுவட்டார பகுதிகளில் இந்த நூலகத்தில் படித்து போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு துறைகளில் பல்வேறு இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த நூலகத்தில் குறைந்த நபர்கள் மட்டுமே அமர்ந்து தினமும் படிக்கக்கூடிய நிலை உள்ளது புதிய கட்டிடம் கட்டிக் கொடுத்து விரிவான இடம் நூலகத்தில் இருந்தால் அதிக இளைஞர்கள் படிக்க வாய்ப்பாக இருக்கும்.

சொந்த கட்டிடம் தேவை

பரமக்குடி வக்கீல்கள் சங்க செயலாளர் பசுமலை: பரமக்குடியில் உள்ள அரசு கிளை நூலகத்திற்கு இது வரை சொந்த கட்டிடம் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும். அரசாங்கமோ, மாவட்ட நிர்வாகமோ சொந்த கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுத்த பாடில்லை. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வளாகத்தில் உள்ள ஒரு அறையில் நூலகம் இயங்கி வருகிறது. அங்கு நூலகம் இருப்பதே மக்களுக்கு தெரியவில்லை. குறிப்பாக பெண்களோ, மாணவர்களோ அந்த நூலகத்திற்கு சென்று படிப்பதில்லை. மழையால் ஏராளமான புத்தகங்கள் சேதமடைந்து வருகிறது. பரமக்குடியில் நூலகம் இருந்தும் பயனற்று உள்ளது. ஆரம்பத்தில் இருந்த வாசகர்களை விட தற்போது மிக மிக குறைவான வாசகர்களே இருக்கும் நிலை உள்ளது. எனவே பரமக்குடி அரசு கிளை அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story