காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி படேதாள ஏரி நிரம்பியது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியான படேதாள ஏரி நேற்று முன்தினம் நள்ளிரவில் நிரம்பியது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி கால்வாய்கள் வழியாக, கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு பின் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியதால், கிராம மக்கள் நள்ளிரவு 12 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
மேலும் காலையில் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீரில் ஏராளமான மீன்களும் சென்றதால் அவற்றை பிடிக்க இளைஞர்கள் குவிந்தனர். இந்த நிலையில், படேதாள ஏரியில் இருந்து பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கால்வாயில் முட்புதர்கள் நிறைந்து, மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் கால்வாயை சீரமைத்து ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.