24 ஆண்டுகளுக்கு பின்னர் ஜருகு பெரிய ஏரி நிரம்பியது விவசாயிகள் மலர்தூவி தண்ணீரை வரவேற்றனர்
24 ஆண்டுகளுக்கு பின்னர் ஜருகு பெரிய ஏரி நிரம்பியது விவசாயிகள் மலர்தூவி தண்ணீரை வரவேற்றனர்
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே மானியதள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஜருகு கிராமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் பல ஆண்டுகளாக தண்ணீர் நிரம்பாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது தொடர் மழை காரணமாக ஜருகு பெரிய ஏரி சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பியது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி தலைமையில் ஏரிக்கு சென்று மலர்தூவி தண்ணீரை வரவேற்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த ஏரி தண்ணீர் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் பெரிய ஏரி, புட்டான் ஏரி மற்றும் சின்னம்பட்டி வழியாக மேட்டூர் அணை வரை உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் நீர் வழிப்பாதையை தூர்வாரி தடுப்பணைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது ஆக்கிரமிப்புகளால் மழைநீர் வெளியேற முடியாததால் கரும்பு, மஞ்சள், ராகி, பூந்தோட்டங்கள் மழைநீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. எனவே மாவட்ட நிர்வாகம் ஏரிக்கு செல்லும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.