தர்மபுரி ராமாக்காள் ஏரி எப்போது சுற்றுலா தலமாக மாறும்? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


தர்மபுரி ராமாக்காள் ஏரி எப்போது சுற்றுலா தலமாக மாறும்? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி ராமாக்காள் ஏரி எப்போது சுற்றுலா தலமாக மாறும்? என்று தர்மபுரி நகராட்சி 1-வது வார்டு பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

1-வது வார்டு

தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் நகராட்சியின் வடக்கு எல்லை பகுதியில் 1-வது வார்டு அமைந்துள்ளது. இந்த வார்டில் மதிகோன்பாளையம், பழைய தர்மபுரியில் ஒரு பகுதி, புதிய திருப்பத்தூர் சாலை, மொரப்பூர் சாலை, கொட்டாய்மேடு ஆகிய பகுதிகள் உள்ளன. இவற்றில் விவசாயிகள், தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.

இந்த வார்டில் 745 வீடுகள் உள்ளன. 50-க்கும் மேற்பட்ட தெரு விளக்குகளும், 3 குடிநீர் தொட்டிகளும் உள்ளன. வார்டின் மக்கள் தொகை 2 ஆயிரத்து 772 ஆகும். இந்த வார்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,918. இதில் 937 ஆண் வாக்காளர்களும், 981 பெண் வாக்காளர்களும்உள்ளனர்.

ராமாக்காள் ஏரி

தர்மபுரி ஒழுங்குமுறை விற்பனை கூடம், குளிர் பதன கிடங்கு, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ஆகியவை இந்த வார்டில் அமைந்துள்ளன. மேலும் தர்மபுரி நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான ராமாக்காள் ஏரி இந்த வார்டில் தான் உள்ளது. 280 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி மூலம், 150 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற்று வருகிறது. மேலும் தர்மபுரி நகரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு முக்கிய காரணமாகவும் இந்த ஏரி உள்ளது. ஏரி பகுதியில் பெய்யும் மழை மற்றும் பஞ்சப்பள்ளி சின்னாறு அணையின் உபரிநீர் திட்டத்தின் மூலம் இந்த ராமாக்காள் ஏரிக்கு தண்ணீர் வருகிறது. ஏரிக்கரையில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் அமைந்துள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ராமாக்காள் ஏரியை சுற்றுலா தலமாக உருவாக்க வேண்டும். ஏரியில் அமைக்கப்பட்டுள்ள நடை பயிற்சிக்கான வழித்தடத்தை சீரமைக்க வேண்டும். 1-வது வார்டில் குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

புதிய திருப்பத்தூர் ரோடு பகுதியை சேர்ந்த பாலன்:-

1-வது வார்டு பகுதியில் வசிக்கும்மக்களுக்கு குடிநீர், கழிவு நீர் கால்வாய் ஆகிய வசதிகளை தேவையான அளவில் ஏற்படுத்த வேண்டும். ராமாக்காள் ஏரி கரை பகுதியில் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சிக்கு வந்து செல்கிறார்கள். நடைபயிற்சி செல்வோரின் வசதிக்காக சிமெண்டு கற்களால் ஆன நடைபாதை அமைக்கப்பட்டது. தற்போது இந்த பாதை ஆங்காங்கே சேதமடைந்தும், புற்கள் முளைத்தும் காணப்படுகிறது. மேலும் மாலை வேளையிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக விளக்குகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ஏரியில் கழிவுநீர் கலப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டும். மேலும் ஏரியின் அருகே கழிவுநீரை சுத்திகரிக்க வசதியாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

சிறுவர் பூங்கா

சமூக ஆர்வலர் தாமோதரன்:-

தர்மபுரி நகரில் பொதுமக்கள் தங்களது பொழுதை குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் கழிக்க வசதியாக பூங்கா உள்ளிட்ட எந்தவொரு பொழுதுபோக்கு இடங்களும் சொல்லி கொள்ளும் அளவில் இல்லை. இதனால் 1-வது வார்டுக்குட்பட்ட ராமாக்காள் ஏரிக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கிறார்கள். எனவே இங்கு சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். மேலும் ஏரி கரையை சுற்றி படர்ந்துள்ள புதர்களை அகற்ற வேண்டும். ஏரிக்கு வந்து செல்லும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது. இது முறையான பயன்பாடு இன்றி பூட்டி கிடக்கிறது. இதனால் ஏரிக்கு வந்து செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே சுகாதார வளாகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும்.

உயர் கோபுர மின் விளக்கு

குடும்பத் தலைவி லதா:-

ராமாக்காள் ஏரி அருகே உள்ள கிருஷ்ணகிரி ரோடு, திருப்பத்தூர் ரோடு பிரியும் சந்திப்பில் இரவு நேரங்களில் போதிய அளவில் வெளிச்சமில்லை. எனவே இங்கு உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். இந்த வார்டு பகுதியில் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதை முறைப்படுத்தி பொதுமக்களுக்கு குடிநீரை தேவையான அளவில் வழங்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதால் வேகத்தடை அமைக்க வேண்டும். வார்டு பகுதியில் குப்பைகள் அகற்றப்படுகிறது. இருந்த போதிலும் விரைவாக குப்பை சேர்ந்து விடுகிறது. குப்பைகள் தேங்காமல் இருக்கவும், கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story