கறம்பக்குடி பகுதியில் ஏரி, குளங்கள் வறண்டன


கறம்பக்குடி பகுதியில் ஏரி, குளங்கள் வறண்டன
x

சுட்டெரிக்கும் வெயிலால் கறம்பக்குடி பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் வறண்டன. மழைக்காலம் வருவதற்குள் வரத்து வாரிகளை தூர்வாரி பாசன குளங்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

பாசன குளங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவில் உள்ள 39 ஊராட்சிகளில், 12 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகள் ஆகும். மீதமுள்ள 27 ஊராட்சிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. மழைக்காலங்களில் ஏரி குளங்களின் மூலம் சேமிக்கப்படும் தண்ணீர், மற்றும் ஆழ்குழாய் பாசனம் வாயிலாக மட்டுமே இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தை ஒட்டிய பகுதி என்பதால் விவசாயமே இப்பகுதியில் பிரதான தொழிலாக உள்ளது.

கறம்பக்குடி தாலுகாவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 9 ஏரிகள் 30-க்கும் மேற்பட்ட பெரிய பாசன குளங்கள் உள்ளன. இதைத்தவிர ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சியின் பராமரிப்பில் 100-க்கு அதிகமான பாசனக் குளங்கள், குட்டைகள் உள்ளது. இவற்றின் மூலம் இப்பகுதியில் உள்ள சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

தண்ணீர் பஞ்சம் ஏற்படும்

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பாசன குளங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும், வரத்து வாரிகள் தூர்ந்து போய் இருப்பதாலும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பாலும் எவ்வளவு மழை பெய்தாலும் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்வது இல்லை. சில பாசன குளங்கள் பல ஆண்டுகளாக வறண்ட நிலையில் உள்ளன.

இதனால் கிராம பகுதிகளில் கூட நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். விவசாயம் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.

கோரிக்கை

தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கறம்பக்குடி பகுதியில் உள்ள 90 சதவீத நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. பல குளங்கள் கருவேல மரங்கள் படர்ந்து முட்புதர்களாய் காட்சி அளிக்கின்றன.

எனவே வரும் பருவ மழை காலத்தில் தண்ணீர் வீணாகாமல் தடுக்கும் வகையில் வரத்து வாரிகளை தூர்வாரி பாசன குளங்களில் தண்ணீர் தேங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

தூர்வார வேண்டும்

கோட்டைக்காடு விவசாயிகள் சங்க தலைவர் ஆரோக்கியசாமி:- கறம்பக்குடி பகுதியில் முறையான நீர் மேலாண்மை திட்டம் இல்லாததால் பல பாசன குளங்கள் வறண்டு சமவெளிகளாக காட்சி அளிக்கும் நிலை உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கள் பகுதியில் ஆழ்குழாய் பாசனம் அதிகம் இல்லை. குளங்கள் பாசன கிணறுகள் மூலம் மட்டுமே விவசாயம் நடைபெற்றது.

ஆனால் சமீப காலமாக பாசன குளங்கள் பராமரிக்கப்படாததால் மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காத நிலை ஏற்படுகிறது. எனவே ஆழ்குழாய் பாசனம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அதுவும் நிலத்தடி நீர்மட்டம் குறைவு, மின்சார பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்படும் நிலை. எனவே பாசனக் குளங்களை தூர்வாரி பராமரிப்பது அவசிய தேவையாக உள்ளது.

குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை

ராங்கியன் விடுதியை சேர்ந்த பழனியப்பன்:- கறம்பக்குடி தாலுகாவில் உள்ள காவிரி பாசன பகுதிகளில் கிளை வாய்க்கால்களில் முறையாக தண்ணீர் வருவதே இல்லை. கடந்த ஆண்டு வெள்ளம் கரை புரண்டு போன நிலையிலும் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்ட போதும் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படாததால் எங்கள் பகுதி பாசன குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை.

மேலும் வரத்து வாரிகளில் முட்கள் மண்டி கிடக்கின்றன. குளங்கள் தூர்வாரப்படாமல் இருப்பதால் மழை தண்ணீரும் குளங்களில் தேங்குவது இல்லை. எனவே குளங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர் மேலாண்மை திட்டம்

தீத்தான்விடுதியை சேர்ந்த முருகதாஸ்:- சுட்டெரிக்கும் கோடை வெயிலால் பாசன குளங்கள் அனைத்தும் வறண்டு பிளவு பட்டு கிடக்கின்றன. குளங்களை மராமத்து செய்வதற்கும், வரத்து வாரிகளை சீரமைப்பதற்கும் இதுவே சரியான தருணம். மழை பெய்யும் போதும், காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்ட பின்னரும் தூர்வாரும் அறிவிப்பை வெளியிடுவதால் எந்த பயனும் இல்லை.

முறையான நீர் மேலாண்மை திட்டம் கடைப்பிடிக்கப்பட்டால் மட்டுமே கறம்பக்குடி பகுதியில் விவசாயிகள் பயன்பெறும் நிலை ஏற்படும். எனவே பருவ மழை தொடங்கும் முன்னர் ஏரி, குளங்களை பராமரிப்பது அவசியம். மேலும் இந்த ஆண்டு காவிரி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story