ஏரிகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
குறை தீர்க்கும் கூட்டம்
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பிரியா, வேளாண்மை இணை இயக்குனர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அப்போது விவசாயிகள் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக ராகி கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களில் விவசாயிகள் ராகி சாகுபடியை அதிகரித்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு ராகி கொள்முதலை விவசாயிகளிடம் விரைவாக தொடங்க வேண்டும்.
கொள்முதல் விலை
மாவட்டத்தில் சராசரி அளவைவிட இப்போது குறைவாக மழை பெய்துள்ளது. இதனால் நிலக்கடலை, சாமை, சோளம் ஆகிய பயிர்களை சாகுபடி செய்வதற்கு விதைகளை விவசாயிகளுக்கு வழங்க தயார் நிலையில் வைக்க வேண்டும். கரும்பு சாகுபடிக்கான செலவு, வெட்டு கூலி அதிகரித்துள்ளது. எனவே கரும்பு கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் மாவட்டத்தில் கருப்பு சாகுபடி குறையும். அதன் மூலம் இங்கு செயல்படும் 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரவை பணி பாதிக்கப்படும். இதை கருத்தில் கொண்டு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும். கரும்பு நடவுக்கு விதை கரும்பை மானியமாக வழங்க வேண்டும்.
கடன் தள்ளுபடி
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு ஏரிகளில் முள் செடிகள் அடர்ந்து வளர்ந்து விட்டன. இதனால் மழைகாலங்களில் தண்ணீரை ஏரிகளில் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படும். எனவே அனைத்து ஏரிகளையும் தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும். ஆவின் கடைகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.
விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வட்டி அல்லது அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். திருந்திய வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
இந்த கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சாமிநாதன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சக்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நசீர் இக்பால் மற்றம் துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.