கோவை தொழில் அதிபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி


கோவை தொழில் அதிபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி
x
தினத்தந்தி 2 Aug 2023 12:45 AM IST (Updated: 2 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கோவை தொழில் அதிபர்களிடம் மும்பை போலீஸ் என்று கூறி லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்றது.

கோயம்புத்தூர்

கோவை தொழில் அதிபர்களிடம் மும்பை போலீஸ் என்று கூறி லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்றது.


இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-


மும்பை போலீஸ் என்று மோசடி


ஆன்லைன் மூலம் புதுப்புது முறைகளை கையாண்டு மோசடிகளை மர்ம கும்பல் அரங்கேற்றி வருகிறது. அவர்கள், பெடக்ஸ் இண்டர்நேசனல் கொரியர் மூலம் பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் தொழில் அதிபர்களின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை தேடி கண்டறிகிறார்கள்.


அதில் சில தொழில் அதிபர்களை குறி வைத்து மும்பை கிரைம் பிராஞ்ச் போலீஸ் என்று கூறி செல்போனில் தொடர்பு கொள்கி றார்கள். அப்போது போலீஸ் என்பதை குறிக்கும் சின்னம் (லோகோ) வரும் வகையில் வடிவமைத்து உள்ளனர்.


இதனால் அந்த அழைப்பை பார்ப்பவர்கள் போலீசார் தான் அழைக்கிறார்கள் என்று நம்பி விடுகிறார்கள். அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மர்ம நபர்கள், தொழில் அதிபர்களிடம், வெளிநாட்டில் இருந்து போதை பொருள் இறக்குமதி செய்து உள்ளதாக தகவல் வந்து உள்ளது.


பணம் அனுப்ப கூறி மிரட்டல்


எனவே வழக்கு பதிவு செய்யாமல் இருக்க குறிப்பிட்ட தொகையை ஆன்லைன் மூலம், தாங்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு உடனே செலுத்துமாறு கூறுகிறார்கள். மேலும் அந்த இணைப்பை தொடர்பில் வைத்துக் கொண்டு மற்றொரு செல்போனில் அழைத்தும் பணத்தை உடனடியாக அனுப்புமாறு கூறி மிரட்டுகிறார்கள்.


இதனால் அச்சம் அடையும் தொழில் அதிபர்கள், வழக்கில் சிக்கி கொள்ளாமல் இருக்க பணத்தை அனுப்பி வைக்கிறார்கள். இது போன்ற மோசடியில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த தாக கோவையில் இதுவரை 5 பேர் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.


ஆன்லைன் முதலீடு


மேலும் ஆன்லைனில் முதலீடு பெயரில் மோசடி செய்வதும் அதிகரித்து வருகிறது. முதலில் ஆன்லைனில் தாங்கள் நடத்தும் போட்டியில் கலந்து கொண்டு முதலீடு செய்தால் அதிக தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறி மெசேஜ் அனுப்புகிறார்கள். அதை நம்பி லட்சக்கணக்கில் முதலீடு செய்யும்போது ஏமாற்றி விடுகிறார்கள்.


கோவை நகரில் மட்டும் இது போன்று 1000-க்கும் மேலான புகார்கள் வந்துள்ளன. எனவே பொதுமக்கள் ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story