இணைய வழியாக லட்சக்கணக்கில் பணம் மோசடி
பென்னாகரம் தாலுகா மூங்கில்மடுவு பகுதியை சேர்ந்த பொய்யாமொழி நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதத்திடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் சென்னையில் திரைப்பட இயக்குனராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த மாதம் எனது நண்பர்கள் மூலம் டி.அன்டு.ஜி. என்ற பணமுதலீடு செய்யும் ஆப் பற்றி தெரிந்து கொண்டேன். அந்த ஆப்-யை டவுன்லோடு செய்து அந்த ஆப் மூலம் முதலீடு செய்தேன். இந்த ஆப்-பில் செயின் லிங்க் போல் எனக்கு தெரிந்தவர்களையும் இணைப்பதன் மூலம் 10 சதவீத கமிஷன் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறப்பட்டது. இதன்பேரில் பலரை இணைத்ததோடு நானும் ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்தேன். பின்னர் அந்த ஆப் செயல் இழந்தது. எனவே நான் ஏமாற்றப்பட்டதோடு தர்மபுரி மாவட்டத்தில் பலரும் பலலட்சம் வரை ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே நான் இழந்த ரூ.3 லட்சம் பணத்தை மாவட்ட காவல்துறை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதே போல் பணத்தை இழந்த அதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரி, கோபிநாத், பாரதிதாஸ் ஆகியோரும் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளனர்.