திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் லட்ச தீபம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு


திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் லட்ச தீபம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
x

திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்

திருவட்டார்,

குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 418 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6-ம் தேதி நடைபெற்றது அதனை தொடர்ந்து கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று காலை அரசு மூடு பிள்ளையார் கோவில் அருகில் இருந்தே பக்தர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் நின்றனர்.

மேலும் திருவட்டார் பஸ் நிறுத்தம் அருகில் இருந்து ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்குச்செல்லும் ரோடு குறுகியதாக இருப்பதால் நேற்று காலை வாகங்னங்களால் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் வருகை தந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

தற்போது சனி, ஞாயிறு கிழமைகளில் கோவிலுக்கு அதிகமாக பக்தர்கள் வருவதால் இரு நாட்களும் கோவிலுக்குச்செல்லும் வழியில் போலீசாரை நியமித்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவிலில் கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களில் மட்டுமே லட்ச தீப விழா நடந்து வந்தது. தற்போது கும்பாபிஷேகத்துக்குப் பின்னர் பக்தர்கள் விரும்பினால் கோவிலைச்சுற்றி உள்ள விளக்கணி மாடங்களில் எண்ணெய் விட்டு தீபம்மேற்றலாம் என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று பத்மநாபபுரத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் சார்பில் எண்ணெய் விட்டு லட்ச தீபம் ஏற்றப்பட்டடது. லட்ச தீபம் ஏற்றப்பட்டபோது கோவில் ஜொலித்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.


Next Story