லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம்


லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. தென் அஹோபிலம் என்று போற்றப்படும் இக்கோவில், தமிழகத்தின் முக்கிய 8 நரசிம்மர் கோவில்களில் நடுவில் இருக்கிறது. இக்கோவிலில், மூலவர் லட்சுமி நரசிம்மர், 4 கரங்களுடன் காணப்படுகிறார்.

இந்த கோவிலில், 150 ஆண்டுகளுக்குப்பிறகு, சோபகிருது வருட பிரம்மோற்சவ விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ரூ.50 லட்சம் மதிப்பில் 32 அடி உயரத்தில் புதிய தேர் செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி வெள்ளோட்டம் நடைபெற்றது.

தேரோட்டம்

இதனை தொடர்ந்து, கோவிலின் பிரம்மோற்சவ விழா, கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பிறகு தினந்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வாக பிரம்மோற்சவத்தின் 9-ம் நாளான நேற்று தேர்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு மேள, தாளம் முழங்க, உற்சவ பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.

பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரை, விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்றனர்.

லட்சுமி நரசிம்மர் அவதார வேடம்

இத்தேரானது, கோவில் முன்பிருந்து புறப்பட்டு 4 மாடவீதிகள் வழியாக பக்தர்களின் வெள்ளத்தில் ஆடி, அசைந்தவாறு சென்று, மீண்டும் கோவிலை சென்றடைந்தது. அதன் பிறகு உற்சவ பெருமாளுக்கும், மூலவருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் பூவரசன்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இந்த தேரோட்டத்தின்போது, கேரள செண்டை மேள கலைஞர்கள், லட்சுமி நரசிம்மரின் பல அவதாரங்களில் வேடமணிந்து காட்சியளித்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் லட்சுமி, கோவில் அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள், பூவரசன்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story