லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம்
பல்லவராயன்குளம் கிராமத்தில் லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கலவையை அடுத்த பல்லவராயன்குளம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு 9 யாகசாலைகள் அமைக்கப்பட்டு யாக பூஜைகள் நடைபெற்றது. டாக்டர் உ.வே.சுதர்சன ஆச்சாரியார் மங்கல சாஸ்தா, கிருபானந்த வாரியார் சுவாமிகள் சீடர் குரு மகாராஜா சிவானந்தாரியார் பிரசன்னத்துடன் நான்கு கால யாகசாலை நிறைவு பெற்று, நேற்று காலை 10 மணி அளவில் யாகசாலையில் வைத்திருந்த புனித நீரை கோவில் விமானத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகர், மாரியம்மன், நவகிரகங்கள், மூலவர்க்கும் புனித நீர் ஊற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், திமிரி ஒன்றியக்குழு தலைவர் அசோக், துணைத்தலைவர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர், கிராம பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றனர்.
மாலையில் திருக்கல்யாணமும், பெருமாள் அலங்கரிக்கப்பட்டு, வாண வேடிக்கையுடன் வீதி உலாவும் நடைபெற்றது.
விழாவை கோவில் நிர்வாகி எஸ்.டி.வி.சந்துரு முன்னிலையில் ஊர் பொதுமக்கள், ஊர் நாட்டாண்மைகள், அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து திருவிழாவை நடத்தினார்கள்.