நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்


நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்
x

உயர் அழுத்த மின்கம்பம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பத்தூர்

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் குடிநீர், சாலை வசதி, வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 306 பொது நல மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கைவிட வேண்டும்

கூட்டத்தில் ராச்சமங்கலத்தை அடுத்த அனேரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், எங்கள் கிராமம் வழியாக புறவழிச்சாலை அமைப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எங்களிடம் நிலம் கோரப்பட்டது. அதன்படி, எங்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தில் இருந்து புறவழிச்சாலை அமைக்க அரசுக்கு நிலம் கொடுத்துள்ளோம்.

இந்தநிலையில், புறவழிச்சாலை அருகாமையிலேயே உயர்மின் அழுத்த கம்பம் அமைக்க திருப்பத்தூர் மின்வாரியம் முயற்சி எடுத்து வருகிறது.

எங்களிடம் இருந்த 90 சென்ட் நிலத்தில் ஏற்கனவே 20 சென்ட் நிலம் புறவழிச்சாலைக்காக கொடுத்துவிட்டு, மீதியுள்ள 70 சென்ட் நிலத்தில் தான் நாங்கள் விவசாயம் செய்து எங்களது குடும்பத்தை காப்பாற்றி வருகிறோம். இந்தநிலையில் உயர்மின் அழுத்த கம்பம் அமைக்க திருப்பத்தூர் மின்சாரவாரியம் எங்களை நிலம் கேட்டு நிர்பந்தம் செய்வது மட்டும் அல்லாமல், நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், எங்கள் நிலத்தை கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்தி, மாற்று இடத்தில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

வீடுகள் ஒதுக்கீடு

இக்கூட்டத்தில், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த 10 தூய்மைப்பணியாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு லாலா ஏரி பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடிகுடியிருப்பில் ஒதுக்கீடு செய்ததற்கான ஆணைகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.

இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த 16 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) முத்தையன், (வளர்ச்சி) ஹரிஹரன், திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பானு, தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜஸ்ரீ, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயகுமாரி, தாசில்தார் சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story