தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது
ஊத்தங்கரை அருகே தொடர் மழையால் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் கிராமமக்கள் அவதிக்குள்ளாகினர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே தொடர் மழையால் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் கிராமமக்கள் அவதிக்குள்ளாகினர்.
பாலம் அமைக்கும் பணி
ஊத்தங்கரை அருகே உள்ள மூன்றாம்பட்டி ஊராட்சி பொம்மதாசம்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமமக்கள் செல்லும் சாலை குறுக்கே சிறிய தரைப்பாலம் உள்ளது. சிங்காரப்பேட்டை பெரிய ஏரியின் உபரிநீர் செல்லும் பாதையில் உள்ள இந்த தரைப்பாலத்தை கடந்்து பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தரைப்பாலம் சேதமடைந்தது. அதனை சரிசெய்யும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தண்ணீரில் மூழ்கியது
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பொம்மதாசம்பட்டி பகுதியில் கனமழை பெய்தது. இதனால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையாலும், சிங்காரப்பேட்டை பெரிய ஏரியில் உபரிநீர் அதிக அளவில் வெளியேறியதாலும் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த கிராமத்தில் இருந்து வெளியூர் செல்ல மாற்று பாதை இல்லாததால் அவதிக்குள்ளான கிராம மக்கள் தரைப்பாலத்தை கடக்க முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர். மேலும் ஆபத்தை உணராத மாணவர்கள் மழைநீர் செல்லும் பாதையில் செல்பி எடுத்து சென்றனர். எனவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.