தரைப்பாலம் அமைக்கப்படுமா?


தரைப்பாலம் அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

காட்டாற்று வெள்ளத்தில் தினமும் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் 6 கிராம மக்களின் நலனுக்காக தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

காட்டாற்று வெள்ளத்தில் தினமும் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் 6 கிராம மக்களின் நலனுக்காக தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர் பார்த்துள்ளனர்.

குக்கிராமங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ளது கொண்டப்பநாயக்கனபள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்டு காலனூர், ராசிபள்ளி, ஈச்சங்காடு, மாதர் குட்டை, குமரன் குட்டை, குருபர்கொட்டாய் ஆகிய 6 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.

விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற முக்கிய தொழிலாக உள்ள இந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களது அன்றாட, அவசர, தேவைகளுக்கும், மருத்துவ சிகிச்சைக்கும், மருத்துவமனைகளுக்கும் அருகே உள்ள பர்கூருக்கு வந்து செல்கிறார்கள். மேலும் இங்குள்ள மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்களது கிராமங்களில் இருந்து ஜி. நாகமங்கலம் வழியாக கிருஷ்ணகிரி பர்கூர் பகுதிக்கு சென்று படித்து வருகிறார்கள்.

ஆர்ப்பரித்து தண்ணீர் செல்கிறது

இந்த நிலையில் ஜி.நாகமங்கலம் உள்ளிட்ட 6 கிராமங்களுக்கு செல்லும் தார் சாலை இடையே ஆந்திரா மாநிலத்தில் உற்பத்தியாகி கந்திகுப்பம், பர்கூர், ஜெகதேவி, வழியாக சென்று தென்பெண்ணை ஆற்றில் இணையும் இடத்தில் காட்டாறு செல்கிறது. இந்த ஆற்றில் அதிக மழை பெய்யும் காலங்களில் மட்டும் சிறிதளவு தண்ணீர் வருவதுண்டு.

ஆனால் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்ததில் அடுத்து பெரும்பாலும் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளது. இதை தொடர்ந்து பெய்யும் மழையால் நீர்நிலைகளில் இருந்து உபரிநீர் வெளியேறுவதால் இந்த காட்டாற்றில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

ஆபத்தான பயணம்

இதனால் ஜி.நாகமங்கலம் முதல் 6 கிராமங்களுக்கு செல்லும் சாலையின் நடுவே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழைக்காலங்களில் 5 அடி உயரத்திற்கும் தற்போது இரண்டடி உயரத்திற்கும் சாலையின் நடுவே தண்ணீர் ஓடுகிறது. இதனால் அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்கின்றனர்.

அதிக அளவில் தண்ணீர் செல்லும் போது 10 கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு ஒரப்பம், கந்திகுப்பம் வழியாக பர்கூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் பள்ளி பஸ்கள் வர முடியாத சூழலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. வயதான முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதிலும், மருத்துவர்கள் கிராமங்களுக்கு வருவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தரைப்பாலம்

கால்நடைகளை அழைத்து செல்வதிலும், விவசாய பொருட்கள் எடுத்து செல்ல முடியாத சூழலில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக உயிருக்கு அச்சப்பட்டு நாள்தோறும் கிராமமக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் காட்டாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story