மூழ்கும் நிலையில் தரைப்பாலம்


மூழ்கும் நிலையில் தரைப்பாலம்
x
தினத்தந்தி 4 May 2023 5:30 AM IST (Updated: 4 May 2023 5:30 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை அருகே ஆழியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, தரைப்பாலம் மூழ்கும் நிலை உள்ளது.

கோயம்புத்தூர்

ஆனைமலை,

ஆனைமலை அருகே ஆழியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, தரைப்பாலம் மூழ்கும் நிலை உள்ளது.

தரைப்பாலம்

ஆனைமலை அருகே காளியப்பன் கவுண்டன்புதூர் பகுதியை சுற்றி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு ஆனைமலையில் இருந்து 2 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. அந்த வழியில் தரைமட்ட பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பாலத்தின் பக்கவாட்டு சுவர் உடைந்த நிலையில் உள்ளது.

இதற்கிடையில் பருவமழை காலங்களில் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது ஆற்றில் அடித்து வரப்படும் தென்னை மட்டை, ஓலை, பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள் பாலத்தில் அடைத்து விடுகின்றன. இதனால் பாலத்தை வெள்ளம் மூழ்கடித்த படி செல்கிறது. இதன் காரணமாக காளியப்பன் கவுண்டன்புதூர் பொதுமக்கள் பாலத்தின் வழியாக செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர்.

பொதுமக்கள் அவதி

இதைத்தொடர்ந்து ஆத்து பொள்ளாச்சி வழியாக 7 கி.மீ. தூரம் சுற்றி அம்பராம்பாளையம் சுங்கம் வந்து பொள்ளாச்சி உள்ளிட்ட பிற ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் வெள்ளத்தின் போது தரைபாலத்தை கடக்க முயல்பவர் ஆற்றில் அடித்து செல்லப்படுவது தொடர் கதையாக உள்ளது. கடந்த ஆண்டு விவசாயி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இறந்தார்.

வெள்ளத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக சென்று வரவும் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

உயர்மட்ட பாலம்

ஆழியார் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஆனைமலை-அம்பராம்பாளையம் ஆகிய 2 ஆற்றின் வழியாக காளியப்பன் கவுண்டன் புதூர் தரைமட்ட பாலம் வழியாக கேரளாவுக்கு செல்கிறது. பருவமழையின் போது தரைமட்ட பாலம் மூழ்கி விடுகிறது. இதனால் சாலை துண்டிக்கப்படுகிறது.

இதனால் மீனாட்சிபுரம், கேரளாவுக்கு செல்ல வேண்டுமென்றால் 10 கி.மீ. சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக விளைபொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு ஆண்டுதோறும் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். அதற்கான நடவடிக்கையை விரைவில் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story