கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் தடை விதிக்க அதிகாரம் இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு


கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் தடை விதிக்க அதிகாரம் இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு
x

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்க எஸ்.சி., எஸ்.டி, ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கோவில் நிலம்

கிருஷ்ணகிரி மாவட்டம், வி.மாதேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ஜெயராமன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், வி.மாதேபள்ளியில் உள்ள அம்மன் கோவிலுக்கு சொந்தமான 3.75 ஏக்கர் நிலத்தை சீனிவாசன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, எஸ்.சி., சமுதாயத்தை சேர்ந்த தனக்கு சொந்தமான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை சட்டவிரோதமாக எடுக்க முயற்சிப்பதாக தேசிய எஸ்.சி., மற்றும் எஸ்.டி., ஆணையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த ஆணையம், ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை அகற்றக்கூடாது. தற்போதையை நிலையே தொடர வேண்டும் என்று தடை விதித்து உத்தரவிட்டது. உண்மை விவரங்கள் தெரியாமல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சிவில் கோர்ட்டின் அதிகாரத்தை ஆணையம் எடுத்துக்கொள்ள முடியாது. அதனால், ஆணையம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதிகாரம் இல்லை

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ஆக்கிரமிப்பாளர்கள் 11 பேருக்கு ஏற்கனவே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆணையத்தின் உத்தரவு காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை. அதனால், ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பழனிச்சாமி, ஆணையத்துக்கு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

உத்தரவு ரத்து

தேசிய எஸ்.சி., மற்றும் எஸ்.டி., ஆணையம், எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படும் வழக்குகளில் மட்டுமே உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெளிப்படுத்தியுள்ளது. இதுபோல கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை.

எனவே, ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். ஆவணங்களை மறைத்து ஆணையத்தில் வழக்கு தொடர்ந்த மனுதாரர் சீனிவாசனுக்கு ஆயிரம் ரூபாய் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story