நான்கு வழிச்சாலை அமைக்க நில அளவீடு பணி


நான்கு வழிச்சாலை அமைக்க நில அளவீடு பணி
x

பழனி-ஒட்டன்சத்திரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க நில அளவீடு செய்யும் பணி தொடங்கியது.

திண்டுக்கல்

பழனி வழியாக செல்லும் திண்டுக்கல்-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை, நெல்லை உள்பட தென்மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். வாகன பெருக்கம், விபத்து தடுப்பை கருத்தில் கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி-ஒட்டன்சத்திரம் இடையே விபத்து நடக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் பழனி-ஒட்டன்சத்திரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து ஒட்டன்சத்திரத்தில் இருந்து சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, ஆயக்குடி வழியாக பழனி சிவகிரிப்பட்டி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான முதற்கட்ட பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தொடங்கி உள்ளனர். அதன்படி சாலை அமைய உள்ள பகுதியில் நில அளவீடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறும்போது, பழனி-ஒட்டன்சத்திரம் இடையே ஏற்கனவே விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியை தவிர்த்து பிற இடங்களில் சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. இதற்காக சாலையோரத்தில் இருந்த பல மரங்கள் வெட்டப்பட்டன. இந்த மரங்களுக்கு ஈடாக வனத்துறையுடன் இணைந்து மரக்கன்றுகள் நட திட்டமிட்டு உள்ளோம். நில அளவீடு பணிகள் முடிந்தவுடன் சாலை பணிகள் தொடங்கும் என்றனர்.


Next Story