நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் நிலம் வாங்க ரூ.50 லட்சம் மானியம் ஒதுக்கீடு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்


நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர்  நிலம் வாங்க ரூ.50 லட்சம் மானியம் ஒதுக்கீடு  தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நிலம் வாங்க ரூ.50 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதை பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர்

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்களின் கீழ் நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் வேளாண் நிலம் வாங்க சந்தை மதிப்பில் ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் பெற நிலம் வாங்கும் திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு நிலம் வாங்க கடலூர் மாவட்டத்திற்கு 2022-23-ம் நிதியாண்டிற்கு மொத்த இலக்கு எண்ணிக்கை 10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 9 நபர்கள் ஆதிதிராவிடர்களுக்கும் மற்றும் 1 நபர் பழங்குடியினருக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

முன்னுரிமை

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவராக இருக்க வேண்டும். மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மகளிர் அல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன் பெயரில் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும், விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தில் ஏற்கனவே மானியம் பெற்றிருக்க கூடாது. வாங்க உத்தேசித்துள்ள நிலத்தை விண்ணப்பதாரரே தேர்வு செய்ய வேண்டும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

பதிவு செய்ய வேண்டும்

அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். நிலத்தின் சந்தை மதிப்பீட்டின் படி திட்ட தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் http://application.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் மற்றும் பழங்குடியினர் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story