2 இடங்களில் மண் சரிவு


2 இடங்களில் மண் சரிவு
x
தினத்தந்தி 25 July 2023 10:00 PM GMT (Updated: 25 July 2023 10:00 PM GMT)

வால்பாறையில் தொடர் மழையால் 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் தொடர் மழையால் 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

மண் சரிவு

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை விடிய, விடிய வால்பாறை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் நகரில் குளிர்ந்த காலநிலை நிலவியது.

தொடர் மழையால் சோலையாறு சுங்கம் ஆறு, கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, வாழைத்தோட்டம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட் மதுரை வீரன் கோவில் வளாகம் பகுதியில் உள்ள சாலையில் 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மேல்நீராறு அணையை சுற்றியுள்ள வனப்பகுதி, அக்காமலை புல்மேடு பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேல் நீராறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

இதன் காரணமாக மேல் நீராறு அணையில் இருந்து 2,543 கனஅடி தண்ணீர் சுரங்க கால்வாய் வழியாக சோலையாறு அணைக்கு சென்று கொண்டிருக்கிறது. கனமழையால் சுற்றுலா தலமான கூழாங்கல் ஆறு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வரவில்லை. இதனால் சாலையோர வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து வைத்தனர். ஆறுகள், நீர்வீழ்ச்சிகளில் இருந்து வரும் தண்ணீர் முழுவதும் சோலையாறு அணைக்கு செல்வதால், வினாடிக்கு 5,708 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் 106 அடியாக உயர்ந்தது.

இதனால் மாற்றுப்பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி 2,733 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் சோலையாறு அணை முழு கொள்ளளவான 160 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.

மழையளவு

வால்பாறையில் நேற்றைய நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

வால்பாறை-71, அப்பர் நீராறு-116, லோயர் நீராறு-82, சோலையாறு அணை-72, காடம்பாறை-18, சர்க்கார்பதி-30, வேட்டைக்காரன் புதூர்-25.6, மணக்கடவு-30, தூணக்கடவு-36, பெருவாரிபள்ளம்-37, அப்பர் ஆழியார்-11, பொள்ளாச்சி-23, நெகமம்-22.


Next Story