கோத்தகிரி அருகே விடுதி கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது மண் சரிவு -2 பேர் பத்திரமாக மீட்பு


கோத்தகிரி அருகே  விடுதி கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது மண் சரிவு -2 பேர் பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 24 July 2023 7:15 PM GMT (Updated: 24 July 2023 7:15 PM GMT)

கோத்தகிரி அருகே கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் மண்ணுக்குள் புதைந்த தொழிலாளர்கள் 2 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் மண்ணுக்குள் புதைந்த தொழிலாளர்கள் 2 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

அஸ்திவாரம் தோண்டும் பணி

கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு பகுதியில் தனியார் ஒருவருக்கு சொகுசு விடுதி கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. சாலையில் இருந்து சுமார் 50 அடி தாழ்வான பகுதியில் நடைபெற்று வரும் இந்த பணியில் தருமபுரி மாவட்டம் பொம்முடி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (வயது 40) மற்றும் குப்புசாமி (வயது 30) என்கிற 2 தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர். கடந்த சில நாட்களாக கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்ணில் ஈரம் நிலவி வருகிறது. நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் அஸ்திவார குழியில் திடீரென மண் சரிந்து விழுந்தது. இந்த மண் சரிவின் காரணமாக மண்ணுக்குள் 2 தொழிலாளிகளும் சிக்கினர். இடுப்பு வரை மண் மூடி இருந்ததால் அவர்களால் அங்கிருந்து வெளியே வர முடியவில்லை. வலியால் அலறிய அவர்கள், உதவிக்காக சத்தம் போட்டனர். அதைக் கேட்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சம்பவ இடத்திற்கு சென்று மண்ணில் புதைந்திருந்த அவர்களை மீட்க முயற்சித்தனர்.

2 பேர் மீட்பு

ஆனால் முடியாததால் கோத்தகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் கருப்புசாமி, சிறப்பு நிலைய அலுவலர் மாதன் ஆகியோர் தலைமையில் 6 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழுவினர் விரைந்து சென்று மண்ணில் புதைந்திருந்த தொழிலாளர்களை சுமார் ஒருமணி நேரம் போராட்டதிற்கு பின் உயிருடன் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அவர்கள் 2 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story