நிலச்சரிவால் திசைமாறிய சுரங்கனார் நீர்வீழ்ச்சி : சீரமைப்பு பணிக்காக காத்திருக்கும் விவசாயிகள்


நிலச்சரிவால்   திசைமாறிய   சுரங்கனார் நீர்வீழ்ச்சி :  சீரமைப்பு பணிக்காக காத்திருக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 8 Oct 2022 1:15 AM IST (Updated: 8 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

நிலச்சரிவால் சுரங்கனார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழும் பாதை மறிக்கப்பட்டு திசை மாறி செல்கிறது. இதனால் சீரமைப்பு பணி்க்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

தேனி

மேற்கு தொடர்ச்சி மலை

தேனி மாவட்டம் கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பச்சை பசேலென இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் சுரங்கனார் நீர்வீழ்ச்சி உள்ளது. மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் சுரங்கனார் நீர் வீழ்ச்சியாக கொட்டுகிறது. இந்த அருவியில் கொட்டும் தண்ணீர் ஓட்டாண்குளம் என்று அழைக்கப்படும் மைத்தல மன்னடியான்குளத்தில் தேங்குகிறது. இதனால் ஒட்டாண்குளம், ஈஸ்வரன் கோவில் புலம், பாரவந்தான், ஒழுகுவழி சாலை பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.

முல்லைப்பெரியாற்றில் இருந்து வைரவன் வாய்க்கால் மூலம் கூட்டாறு வழியாக வினாடிக்கு 5 கனஅடி தண்ணீர் இந்த குளத்திற்கு 10 மாதங்களுக்கு திறந்துவிடப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் ஒட்டாண்குளத்திற்கு தண்ணீர் வரும் சுரங்கனார் நீர் வீழ்ச்சி அருகே கடந்த 2011-ம் ஆண்டு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவு

மலைப்பகுதியில் இருந்து மண், செடி, கொடிகள், மரங்கள் சரிந்துவிழுந்தன. இதனால் அருவியில் விழும் தண்ணீர் மறிக்கப்பட்டு திசைமாறி வீணாகி வருகிறது. ஒட்டாண்குளத்துக்கு தண்ணீர் வராததால் பாசன விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து விவசாயிகள் மற்றும் நகர் நலசேவை சங்கத்தினர் மாவட்ட கலெக்டர், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொதுப்பணித்துறை உயர்அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்து உள்ளனர்.

தற்போது 18-ம் கால்வாய் வழியாக குறைந்த அளவு தண்ணீர் கொண்டுவரப்பட்டு குளத்தில் தேக்கி வைக்கப்படுகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் சுரங்கனார் நீர் வீழ்ச்சி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவை சரிசெய்து, ஒட்டாண்குளத்தில் அதிகளவு தண்ணீர் தேக்கி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதிகாரிகள் ஆய்வு

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில்:-

சதீஷ் பாபு (பாரதீய கிஷான் சங்கம் மாவட்ட தலைவர்):- ஆண்டுதோறும் சுரங்கனார் நீர் வீழ்ச்சி பகுதியில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு வரத்து வாய்க்கால் தூர்வாரப்படும். இதனால் தண்ணீர் தங்கு தடையின்றி வரும். ஆனால் கடந்த 2011-ம் ஆண்டு அந்தப் பகுதியில் தூர்வார வனத்துறையினர் அனுமதி வழங்காததால் மழை காலங்களில் மணல்மேடுகள் ஏறி அந்தப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாகி கூட்டாறு வழியாக சென்று முல்லைப்பெரியாற்றில் கலக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆனால் இந்த இடம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளதால் மத்திய வனத்துறை மூலம் அனுமதி பெற்ற பிறகே சீரமைக்க முடியும். இதனால். சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்டால் வனப்பகுதியையொட்டி தடுப்பணை கட்டி வனவிலங்குகளுக்கு குடிநீராக பயன்படுத்தலாம்.

சீரமைக்க கோரிக்கை

கொடியரசன் (முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர்):- சுரங்கனார் நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் மழைநீரை ஓட்டாண்குளத்தில் தேக்கி வைத்து விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் நிலச்சரிவு ஏற்பட்டதால் கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீர் திசைமாறி சென்றதால் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள கிணறுகள், நீர் நிலைகளில் தண்ணீர் வற்றி உள்ளது. இதனால் மானாவாரி நிலங்கள், தோட்ட விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜெயபால் (முல்லைச்சாரல் விவசாய சங்க பொருளாளர்) சுரங்கனார் நீர் வீழ்ச்சியில் இருந்து ஓட்டாண்குளத்துக்கு தண்ணீர் கொண்டுவர கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயிகள் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைத்து உள்ளனர். தற்போது நீர்வீழ்ச்சி அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் வரத்து வாய்க்கால் மூடப்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து 12 மாதங்கள் வரை மழை நீர் வரும். இதனால் ஒட்டாண் குளம் வற்றாமல் நீர் நிரம்பியே இருக்கும்.

மேலும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் நடைபெற்றது. இதனால் 2 ஆயிரம் ஏக்கர் மானாவாரி விவசாயிகளும் பயன் அடைந்து வந்தனர். எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மத்திய வனத்துறையின் அனுமதி பெற்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story