'மொழி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்' முதல்-அமைச்சர் பேச்சு


மொழி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் முதல்-அமைச்சர் பேச்சு
x

மொழி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தமிழ் இசை சங்கத்தின் 80-ம் ஆண்டு விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சுந்தரமூர்த்தி வரவேற்றார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் சவுமியாவுக்கு 'இசைப்பேரறிஞர்' பட்டமும், மயிலை சற்குருநாதன் ஓதுவாருக்கு 'பண் இசைப்பேரறிஞர்' பட்டமும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தமிழ் இசை இன்று இந்தளவுக்கு கொடி கட்டி பறக்கிறது என்றால், அதற்கு இந்த தமிழ் இசை சங்கம்தான் காரணம். பல நூற்றாண்டு காலமாக, நம்முடைய தமிழ் நிலப்பரப்பு, பல்வேறு பண்பாட்டு படையெடுப்புகளுக்கு ஆளானது.

தாக்குதலுக்கு உள்ளானது

அந்நியர் ஆக்கிரமிப்பால், தமிழ்நாடு பாதிக்கப்பட்டது. அந்நிய இனத்தவர் படையெடுப்பால், நமது இனம் அதனுடைய உரிமையை இழந்தது. அந்நிய மொழிக்காரர்களின் ஊடுருவல் காரணத்தால், தமிழ் புறக்கணிக்கப்பட்டது. ஆதிக்க வர்க்கத்தினரால், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இப்படி பல்வேறு தாக்குதலால் தமிழ்நாடும் - தமிழினமும் - தமிழ்மொழியும் தாக்குதலுக்கு உள்ளானது.

இந்த சூழலில் தமிழினத்தின் உரிமையை காக்க, திராவிட இயக்கம் எழுந்தது. தமிழ் மொழியை காக்க, மறைமலையடிகள் தலைமையில், தனித்தமிழ் இயக்கம் எழுந்தது. தமிழ் கலையை காக்க தமிழ் இசை சங்கம் எழுந்தது.

தனித்தமிழ் இயக்கமாக இருந்தாலும், தமிழிசை இயக்கமாக இருந்தாலும், அனைத்தையும் திராவிட இயக்கம் முழுமையாக ஆதரித்து போற்றியது.

கேவலம் என நினைத்த காலம்

தமிழ்நாட்டில், தமிழ் மேடைகளில், தமிழ் பாட்டை பாடுவது, கேவலம் என்று நினைத்த ஒரு காலம் இருந்தது. தமிழில் பாடினால், மேடை தீட்டாகிவிடும் என்று நினைத்தார்கள். தமிழை நீசபாஷை என்று பழித்தார்கள். தமிழ்நாட்டில் தமிழ் மேடைகளில், தமிழில் பாட வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டி இருந்தது.

தமிழில் பாடச்சொல்லி, இசை மேடைகளில் திராவிட இயக்கத்தினர் குரல் கொடுக்க தொடங்கினார்கள். இதனால் வேறு வழியில்லாமல், ஒரு பாட்டு பாடுவார்கள். அதற்கு 'துக்கடா' பாட்டு என்று பெயர். தமிழையே துக்கடா ஆக்கி வைத்திருந்தார்கள்.

'தமிழ் நீசபாஷையாக இருந்தால், தமிழன் கொடுக்கும் காசு நீசக்காசு ஆகாதா?' என்று கேட்டார் தந்தை பெரியார்.

தமிழிசையை காத்த அரசர் ராஜா அண்ணாமலை. பிறமொழி படையெடுப்பை தடுத்தவர். தமிழிசை இயக்கத்தில், ராஜா அண்ணாமலை குடும்பத்தின் பங்களிப்பு யாராலும் மறக்க முடியாது.

வெறுப்பு அல்ல

மொழிதான் ஒரு இனத்தினுடைய ரத்த ஓட்டம். மொழி அழிந்தால், இனமும் அழிந்து போகும். எனவேதான் தமிழின் வளர்ச்சியும், தமிழனின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை.

அதனால் பிறமொழி ஆதிக்கத்தை எதிர்ப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். பிறமொழி மீதான வெறுப்பு அல்ல அது.

மொழியை திணிப்பதை ஏற்க மாட்டோம்

ஒருவர் விரும்பினால் எத்தனை மொழி வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம். மொழியை திணிப்பதை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்பதே நமது மொழிக்கொள்கை.

அந்த வகையில் இதுபோன்ற தமிழிசை மன்றங்களின் பணி மிக மிக மகத்தானதாக அமைந்திருக்கிறது. ஒரு மன்றம் அல்ல, இது போல பல மன்றங்கள் தோன்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாராட்டு சான்றிதழ்

முன்னதாக தமிழ் இசை சங்கத்தின் சார்பில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு மற்றும் தாயகம் கவி எம்.எல்.ஏ., தமிழ் இசை சங்கத்தின் செயலாளர் ஏ.சி.முத்தையா, அறங்காவலர் வள்ளி அருண், சீர்காழி சிவ சிதம்பரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story