லாரி மோதி டிபன் கடை உரிமையாளர் சாவு
திருவரங்குளம் அருகே லாரி மோதி டிபன் கடை உரிமையாளர் பலியானார். மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது விபத்து நேர்ந்தது.
டிபன் கடை உரிமையாளர்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கடை வீதியில் டிபன் கடை நடத்தி வந்தவர் முத்து (வயது 62). இவர், தனது மகன் வினோத்குமாருக்கு நேற்று (வியாழக்கிழமை) திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்து வந்தார். இந்நிலையில் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக கடந்த 20-ந்தேதி முத்து கடைவீதி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டையை நோக்கி வந்த லாரி எதிர்பாராதவிதமாக முத்து மீது மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சை பலனின்றி சாவு
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்து நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். திருமணத்தில் மகன்-மருமகளை மணக்கோலத்தில் பார்க்க வேண்டியவர் திருமணம் நடைபெற வேண்டிய நாளில் மருத்துவமனையில் மணமகனின் தந்தை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. திருமண விழாவில் விருந்து நடைபெற வேண்டிய வீட்டில் துக்கம் வீடாக மாறியதால் உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.