மும்பைக்கு நேரடி சிறப்பு ரெயில் அறிமுகம்
மும்பைக்கு நேரடி சிறப்பு ரெயில் அறிமுகம்
தஞ்சை, கும்பகோணம் வழியாக மும்பைக்கு நேரடி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சிறப்பு ரெயில்
தஞ்சை, கும்பகோணம் வழியாக மும்பைக்கு நேரடி சிறப்பு ரெயில் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்களும், ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தினரும் கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில் மும்பை-தூத்துக்குடிக்கு இடையே தஞ்சை, கும்பகோணம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ரெயில்வே துறை நேற்று வெளியிட்டது. கோடைகால நெரிசலை சமாளிக்க சோதனை அடிப்படையில் இந்த சிறப்பு ரெயில் இரண்டு முறை மட்டும் இயங்கும்.
இந்த சிறப்பு ரெயில் இன்றும் (வெள்ளிக்கிழமை) மற்றும் ஜூன் மாதம் 2-ந் தேதியும் மும்பையில் பிற்பகல்1.15 மணிக்கு புறப்பட்டு, ரேணிகுண்டா (சனிக்கிழமை) காலை 8.05 மணி, திருத்தணி (9.03 மணி), காஞ்சீபுரம் (10.08 மணி), கும்பகோணம் (மாலை 3.45 மணி), பாபநாசம் (3.59 மணி), தஞ்சை (4.23 மணி), மதுரை (இரவு 7.55 மணி), வழியாக தூத்துக்குடிக்கு இரவு 11 மணிக்கு சென்றடையும்.
நீட்டிக்க வாய்ப்பு
தூத்துக்குடியில் வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஜூன் மாதம் 4-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, மதுரை காலை 6.30 மணி, தஞ்சை 9.55 மணி, பாபநாசம் 10.19 மணி, கும்பகோணம் 10.32 மணி, காஞ்சீபுரம் மாலை 3.58 மணி, திருத்தணி 4.58 மணி, ரேணிகுண்டா 6.40 மணி வழியாக மும்பைக்கு 29-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 3.40 மணிக்கு சென்றடையும்.
பயணிகள் பயன்பாட்டை பொருத்து, இதன் இயக்கம் பின்னர் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த ஒரே ரெயில் இயக்கத்தின் மூலம் தஞ்சை மாவட்ட ரெயில் பயணிகள் நீண்ட நாட்களாக கோரி வந்த மும்பை, திருத்தணி, காஞ்சீபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு நேரடி ரெயில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் பயனடைவர். பயணிகள் கோரிக்கையை ஏற்று பல இடங்களுக்கு புதிய நேரடி ரெயில் இணைப்பை ஏற்படுத்தி கொடுத்த ரெயில்வே நிர்வாகத்துக்கு தஞ்சை மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்து கொள்கிறது என சங்க செயலாளர் ஏ.கிரி தெரிவித்துள்ளார்.