தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை -எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை -எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x

தி.மு.க. அரசு பதவியேற்றது முதல் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை என்றும், காவல்துறைக்கு முதல்-அமைச்சர் முழு சுதந்திரம் வழங்கி, சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு, கத்தியால் வெட்டிக்கொலை, செல்போனுக்காக ஓடும் ரெயிலில் பெண்ணை தள்ளிக் கொலை, சாலையில் செல்லும் பெண்களிடம் நகை வழிப்பறி என்று தொடர்ந்து பல நிகழ்வுகள் தமிழகத்தில் பல இடங்களில் நடந்தேறி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பின்மை கருதி வெளியில் செல்ல அச்சமடைந்துள்ளனர்.

தொடர்ந்து, தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 4 நாட்களில் மட்டும், ஆளும் கட்சியின் கடலூர் சட்டமன்ற உறுப்பினர், நல்லாத்தூர் கிராமத்தில் தனது நிர்வாகியின் இல்ல விழாவிற்கு சென்றபோது, பெட்ரோல் குண்டு வீசிய பரபரப்பு சம்பவம். செங்கல்பட்டு கோர்ட்டு அருகே வழக்கிற்காக வந்த லோகேஷ் என்பவரை பெட்ரோல் குண்டு வீசி ஒரு கும்பல் படுகொலை செய்த சம்பவம். கடலூர் இம்பீரியல் சாலையில் உள்ள நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடந்துள்ளது.

நெல்லை-தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே மீனாட்சிபட்டியில், டிஜிட்டல் விளம்பர போர்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம். அரசியல் கட்சியைச் சேர்ந்த நகரச் செயலாளர் நாகராஜ், செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் மணிகூண்டு அருகே இரவு நின்று கொண்டிருந்தபோது சமூக விரோத கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் டாஸ்மாக் கடையின் விற்பனை பணம் சுமார் 6.50 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்க, மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணனை கொடூர ஆயுதங்களால் வெட்டிய சம்பவம். நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகே முன்விரோதம் காரணமாக விவசாயி அருணாசலம் என்பவர் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை.

சென்னை புறநகர் ரெயிலில் பயணம் செய்த பிரீத்தி என்ற 22 வயது இளம்பெண்ணிடம் வழிப்பறி திருடர்கள் செல்போனை பறிக்க முயன்றபோது, பிரீத்தி ரெயிலில் இருந்து தள்ளப்பட்டு கொலையான சம்பவம். ஒரு செல்போனுக்காக 22 வயது இளம்பெண்ணின் உயிர் பலியான சம்பவம் மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு சுதந்திரம்

தொடர்ந்து, தி.மு.க. அரசு பதவியேற்ற இந்த 26 மாதங்களாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் விற்பனை, முதியவர்கள் குறிவைத்து தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதை பேட்டியின் வாயிலாகவும், அறிக்கைகளின் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் நான் எடுத்து வைத்து வருகிறேன். எனினும், தி.மு.க. அரசு பதவியேற்றது முதல் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.

மக்களைக் காப்பாற்றாமல், சட்டம்-ஒழுங்கை காப்பாற்றாமல், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர், இனியாவது காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story