தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது- செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேச்சு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
தேவகோட்டை
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
பொதுக்கூட்டம்
பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் சருகணியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேவகோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் பெருவத்தி முருகன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் தசரதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்டு சிவகங்கை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற இரண்டரை வருடத்தில் மின்கட்டணம், பால் விலை, சொத்து வரி, பத்திரப்பதிவு, கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. தினந்தோறும் நடக்கும் மின்வெட்டால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி முதியோர் உதவித்தொகையை உயர்த்தி வழங்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கவில்லை. சிலிண்டருக்கு மானியம் ரூ.100, பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன், நகர் மன்ற தலைவர் கா.சுந்தரலிங்கம், துணைத் தலைவர் ரமேஷ், நகரச் செயலாளர் ராமச்சந்திரன், காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், வி.ஜி.பி. கருணாகரன், கற்பகம் இளங்கோ, வீரபத்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு பேச்சாளராக எம்.கே. ஜமால்.எம் ஜி. பழனிக்குமார் கலந்து கொண்டு பேசினர். பிரபு நன்றி கூறினார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் ஏவி.நாகராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.உமாதேவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், ஒன்றிய செயலாளர் சிவமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான பி.ஆர்.செந்தில்நாதன், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், தலைமைக் கழக பேச்சாளர்கள் சுந்தரபாண்டியன், கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு வரவேற்றார். இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. முன்னிலையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க.வில் இணைத்தனர். கூட்டம் முடிவில் நகர செயலாளர் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் முருகேசன், வக்கீல்கள் அழகர்சாமி, நவநீதபாலன், ராபின், சாமி அன்கோ சுப்பிரமணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.