தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை


தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை
x
தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 1:23 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மக்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என காரைக்குடியில் மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.

சிவகங்கை

காரைக்குடி,

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மக்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என காரைக்குடியில் மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

மத்திய தரைவழி மற்றும் சிவில் விமான போக்குவரத்துதுறை இணை மத்திரி வி.கே.சிங் காரைக்குடி வந்தார். காரைக்குடியில் காலையில் கட்சியினர் இல்லம் செல்லும் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக பா.ஜனதா மாவட்ட துணை தலைவர் எஸ்.வி. நாராயணன் இல்லம் சென்றார். அங்கு கட்சியினரோடு காலை உணவு சாப்பிட்டார். பின்னர் வக்கீல் பிரிவு, சமூக வலைதள பிரிவு, ஊடகப்பிரிவு, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகியவற்றை சேர்ந்தவர்களோடு நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் மற்றும் பயிற்சி வகுப்பினை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு தேர்தல் பணி ஆற்ற வேண்டும், பா.ஜனதாவுக்கு ஆதரவான வாக்குகளை எப்படி திரட்ட வேண்டும், தேர்தல் பிரசார வியூகங்களை எவ்வாறு அமைத்து வெற்றி பாதைக்கு செல்ல வேண்டும், எதிர் அணியினரை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பின் அதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பிறகு ஜி-20 மாநாட்டில் இந்தியாவின் ஆற்றல்மிகு பங்கு குறித்த நூலை வி.கே.சிங் வெளியிட அதனை எச்.ராஜா பெற்றுக்கொண்டார்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு

பின்னர் மத்திய மந்திரி வி.கே.சிங் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு எவ்வாறு செயல்படுத்தி வருகிறது என ஆய்வு மேற்கொள்வதே தமிழக சுற்று பயணத்தின் நோக்கம். மத்திய அரசின் திட்ட பணிகளை மாநில அரசு நிறைவேற்றுவதில் பல்வேறு கட்டங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது. தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, மக்கள் நிறைவு பெறும் வகையில் திருப்தி அளிக்கவில்லை. சிறு நகரங்களுக்கான உதான் திட்டத்தின் கீழான விமான போக்குவரத்து இருவகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்று ஏற்கனவே விமான நிலைய கட்டமைப்பு வசதிகளுடன் உள்ள பகுதிகளில் அதற்கான பணிகள் தொடங்குகிறது. 2-வது அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி அதன் பின் தனியார் பங்களிப்போடு விமானங்களை இயக்குவது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு கூறினார்.

பங்கேற்றோர்

இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் சோழன் சித பழனிச்சாமி, மாவட்ட தலைவர் மேப்பல் சத்தியநாதன், மாவட்ட துணை தலைவர்கள் எஸ்.வி.நாராயணன், விஸ்வநாதகோபாலன், மாவட்ட பொது செயலாளர் நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிதம்பரம், பாலமுருகன், இளைஞரணி மாநில துணை தலைவர் பாண்டித்துரை, பட்டியலணி மாநில செயலாளர் ஆதீனம், காரைக்குடி நகர வடக்கு தலைவர் பாண்டியன், தெற்கு தலைவர் மலைக்குமார், வக்கீல் கார்த்திக் நாராயணன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் பூப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story